அசோக் நகர், அசோக்நகரில், பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி மாநகராட்சியால் கொட்டப்படும் குப்பையால், மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கோடம்பாக்கம் மண்டலம், 138வது வார்டு அசோக் நகர், திருநகர், கபிலர் தெருவில், அரசு உதவிபெறும் எம்.ஏ.கே., உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 600 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இப்பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி, அப்பகுதிகளில் சேகரமாகும் குப்பையை, மாநகராட்சி நிர்வாகம் குவித்து வருகிறது. பின், நான்கு நாட்கள் கழித்து, அங்கு மலை போல் குவியும் குப்பை, 'பொக்லைன்' வாயிலாக அள்ளி, லாரியில் எடுத்துச் செல்லப்படுகிறது.பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி குப்பை கொட்டுவதால், துார்நாற்றத்தால் பள்ளி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அத்துடன், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. தற்போது, டெங்கு பாதிப்பு அச்சமும் உள்ள நிலையில், பள்ளி அருகே மாநகராட்சியே குப்பை கொட்டுவது, முகம் சுளிக்க வைக்கிறது.இந்த குப்பையில் இருந்து பூச்சிகள் மற்றும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து விடுகின்றன. பொக்லைன் வாயிலாக குப்பையை அள்ளும் போது, சுற்றுச்சுவர் இடிந்து விழும் அச்சமும் நிலவுகிறது.இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது:பள்ளி வளாகத்தை சுத்தமாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அதை கண்காணிக்க வேண்டிய மாநகராட்சியே, இதற்கு மாறாக குப்பை கொட்டி வருகிறது. இறந்த நாய் உடலையும், இந்த குப்பையுடன் கொட்டுகின்றனர். இதனால், மாணவர்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். எனவே, இப்பிரச்னைக்கு மாநகராட்சி உயரதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.