| ADDED : மே 12, 2024 12:05 AM
சென்னை, சமூக வலைதளங்களில் தன் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி முயற்சி நடப்பதாக, சென்னை சைபர் கிரைம் போலீசில், சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து புகாரில் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: என் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் வாட்ஸாப்பில் கணக்கு துவங்கியுள்ளனர். எனக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவசர தேவை என கூறி பணம் பறிக்க முயன்றுள்ளனர்.இதுதொடர்பாக நண்பர்கள் என்னிடம் தகவல் தெரிவித்தனர்.போலீசில் புகார் அளிக்க போவதாக எச்சரித்ததை தொடர்ந்து, என் புகைப்படத்தை நீக்கி விட்டார். 'யாரும் மோசடி நபரிடம் பணத்தை இழக்க வேண்டாம்' என, எனது சமூக வலைப்பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளேன். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பாக, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.