ஆவடி, ஆவடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணி, மும்முரமாக நடக்கிறது.ஆவடி மாநகராட்சி, 20வது வார்டுக்கு உட்பட்ட பட்டாபிராம், கோபாலபுரம் மேற்கு பகுதியில் உள்ள 3, 4, 5 மற்றும் 6வது தெருவில், புதிதாக பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணி நடக்கிறது. இந்த நிலையில், அப்பகுதி கவுன்சிலர் கடந்த சில நாட்களாக பொதுமக்களிடம் தகுதிக்கு ஏற்றவாறு, 8,000 முதல் 15,000 ரூபாய் வரை பெற்று, அதற்கு உரிய ரசீது வழங்காமல், சாலையை உடைத்து இணைப்பு வழங்கி வருவதாக கூறப்படுகிறது.இதனால், ஏற்கனவே பாதாள சாக்கடை இணைப்புக்கு 'டெபாசிட்' தொகை 10,000 கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அதிகாரிகள் மேற்பார்வையில் பணிகள் நடை பெறாததால், சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இது குறித்து கவுன்சிலரிடம் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இது புறம் இருக்க, 'போனா வராது; பொழுது போனா கிடைக்காது' என்ற திரைப்பட வசனம் போல், சிலர் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க, 'ட்ரில்லிங்' மிஷினுடன் சுற்றி வருவதாக பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இதில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''கடந்த 2019ல் ஆவடி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதுவரை மண்டல அலுவலகம் ஏற்படுத்தப்படவில்லை.இதனால், ஒவ்வொரு தேவைக்கும் கவுன்சிலரை தவிர்த்து, யாரை அணுக வேண்டும் என, தெரியாமல் உள்ளனர். எனவே, மண்டல அலுவலகம் ஏற்படுத்தி, மண்டல அலுவலரை நியமிக்க வேண்டும்,'' என்றனர்.முறையாக மாநகராட்சி அதிகாரிகளை அணுகி, கீழ்கண்ட தொகையை கட்டினால், பொதுமக்கள் ரசீதுடன் பாதாள சாக்கடை இணைப்பு பெறலாம். மற்றபடி, ரசீது இல்லாமல் அவர்கள் கட்டும் தொகைக்கு மாநகராட்சி பொறுப்பாகாது.- அதிகாரிகள், ஆவடி மாநகராட்சி.
பார்த்து பண்ணுங்க!
குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைக்கு இணைப்பு கொடுக்க சாலை தோண்டப்படுகிறது. பின், முறையாக சிமென்ட் கலவை பூசுவதில்லை. இதனால், சிறிது காலத்திற்குள் சாலை சேதமடைந்து பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.அதேபோல், பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் போது, 1 அடிக்கும் குறைவாக பள்ளம் தோண்டி, பிளாஸ்டிக் குழாய் புதைப்பதால், குறுகிய காலங்களில் குழாய்கள் சேதமாகும் வாய்ப்புண்டு.இதனால், கழிவு நீர், பாதாள சாக்கடைக்கு செல்லாமல், வீடுகளில் தேங்கும் அபாயம் உள்ளது. பின், பொதுமக்கள் மீண்டும் மேற்கூறிய பணத்தை கட்டி சீரமைக்கும் நிலை உருவாகிறது. எனவே, இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவாதம் தருவரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
ஆக்கிரமிப்பு
பட்டாபிராம், கோபாலபுரத்தை பொறுத்தவரை, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சித்தேரி கால்வாயில் பாய்ந்து, சேக்காடு ஏரியை சென்றடைய வேண்டும். ஆனால், சித்தேரி --- சேக்காடு இடையே உள்ள நீர்வழிப்பாதை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.இதனால், மேற்கூறிய தெருவில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து நிற்பதால், பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.