சென்னை, 'சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மூன்று மாதங்களில் பதிவு உரிமம் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.சென்னை மாநகராட்சியில், உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து, தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.இதற்காக, 1,500 கல்லுாரி மாணவ - மாணவியர் உள்ளிட்டோருக்கான பயிற்சி வகுப்பு, ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.பின், கமிஷனர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:சென்னையில் 2018 கணக்கெடுப்பின்படி, 59,000 தெருநாய்கள் இருந்தன. தற்போது தெருநாய்கள் அதிகரித்து இருக்கும்.கணக்கெடுப்பின்போது, தடுப்பூசி போடப்பட்ட நாய்கள், கருத்தடை செய்த நாய்கள், குட்டிகள், பெரிய நாய்கள், ஆண் அல்லது பெண் நாய்கள் என, அனைத்து விபரங்களும் சேகரிக்கப்படும்.தெருநாய்களை பொறுத்தவரை, இந்தாண்டு 10,100 நாய்கள் பிடிக்கப்பட்டு, 7,265 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஏழு ஆண்டுகளில், 1,05,000 நாய்கள் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு அபராத தொகை உயர்த்தியதால், கடந்தாண்டைவிட, 50 சதவீத புகார்கள் குறைந்துள்ளன. அதேநேரம் நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. இந்தாண்டு மட்டும் 1,251 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவது அதிகரித்துள்ளது. இந்தாண்டில், 6,000த்துக்கும் மேற்பட்ட உரிமங்கள் வழங்கப்பட்டு உள்ளன.அனைத்து வளர்ப்பு நாய்களுக்கும், அதன் உரிமையாளர்கள் மூன்று மாதங்களில் கட்டாயம் உரிமம் பெற வேண்டும். அவ்வாறு பெறாத உரிமையாளர்கள் மீது, சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.