''சென்னையில் வாரத்தில் ஒருமுறை கட்டாயம் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும்' என, மாநகராட்சி மேயர் பிரியா கூறியுள்ளார். தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வளர்ச்சி திட்டப்பணிகள், பொது சுகாதாரத்துறை நோய் தடுப்பு பணிகள் குறித்து, மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் ஆய்வு கூட்டம் நேற்று, ரிப்பன் மாளிகையில் நடந்தது.கூட்டத்தில் மேயர் பிரியா பேசியதாவது:சென்னையில் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மழைக்கால நோய் தடுப்பு பணிகளில் கவனம் செலுத்துவதுடன், அனைத்து மண்டலங்களில் உள்ள கட்டடங்கள், வீடுகளிலும் கள ஆய்வு செய்ய வேண்டும். கொசுப்புழு வளரிடங்களை கண்டறிந்து அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் கொசுப்புழு ஒழிப்பு பணி, 2,174 சிறுவட்டங்களாக பிரிக்கப்பட்டு, 908 கொசு ஒழிப்பு நிரந்தர பணியாளர்கள், 2,406 ஒப்பந்த பணியாளர்கள் என, 3,278 பேர் கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு வகையான கொசு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் உள்ளன.மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் கொசு புழுக்களை அழிக்க, ஒரு வார்டுக்கு இரண்டு பேர் என, 400 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒரு குழு, தினமும் 1 கி.மீ., வரை கொசு மருந்து தெளிக்கின்றனர். ஒரு இடத்தில் வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் மருந்து தெளிக்கப்பட வேண்டும்.சென்னையில் 293.75 கி.மீ., நீர்வழித்தடத்தில் கொசுமருந்து தெளிக்க, 128 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள், 64 கி.மீ., துாரத்திற்கு கொசு மருந்து தெளிக்கின்றனர். நாள்தோறும் காலை 6:00 முதல் 7:30 மணி வரையிலும், மாலை 6:00 முதல் 7:30 மணி வரையிலும் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.துணைமேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.