மாமல்லபுரம், இந்திய சர்பிங் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு சர்பிங் சங்கம் ஆகியவை இணைந்து, தேசிய சர்பிங் போட்டிகள் நடத்துகின்றன.அதன் ஒரு போட்டியாக, 'மஹாப்ஸ் பாயின்ட் பிரேக் சேலஞ்ச்' தேசிய சர்பிங் போட்டி, மாமல்லபுரத்தில், நேற்று முன்தினமும், நேற்றும் நடந்தது.இறுதிப்போட்டியில், வயது வரம்பற்ற ஆண்கள் பிரிவில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் புதிஹால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். தமிழகத்தைச் சேர்ந்த அஜீஸ் அலி இரண்டாமிடமும், கிஷோர்குமார் மூன்றாமிடமும் பிடித்தனர்.அதேபோல், 16 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில், கிஷோர்குமார் முதலிடம் பிடித்தார். தாயின் அருண் இரண்டாமிடமும், மாமல்லபுரம் ஹரிஷ் மூன்றாமிடமும் பிடித்தனர்.வயது வரம்பற்ற பெண்கள் பிரிவில், மாமல்லபுரம் கமலி சாம்பியன் பட்டம் வென்றார். ஷ்ரிஷ்தி செல்வம் இரண்டாமிடமும், சந்தியா அருண் மூன்றாமிடமும் வென்றனர்.பின் 16 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில், தமிழகத்தின் கமலி சாம்பியனாக முதலிடம் வென்றார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சான்வி, சென்னை தமயந்தி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.மாமல்லபுரம் போட்டியின் இரண்டு பிரிவுகளிலும் சாம்பியனாக வென்ற மாமல்லபுரம் பள்ளி மாணவி கமலி, கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் நடந்த வெவ்வேறு பெண்கள் பிரிவு போட்டிகளிலும், சாம்பியனாக வென்றது குறிப்பிடத்தக்கது.தேசிய சாம்பியன் தேர்விற்கான, 'கோவலாங் கிளாசிக்' போட்டி, கோவளத்தில், ஆக., 8ம், 9ம், 10ம் தேதிகளில் நடக்கிறது.