சென்னை, 'விதிகளை மீறி கட்டடங்கள் கட்டுவோருக்கு, பணி நிறுத்த நோட்டீஸ் அனுப்புவதில்லை' என, சி.எம்.டி.ஏ., புதிய முடிவு எடுத்துள்ளது.நகர், ஊரமைப்பு சட்டப்படி விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், சி.எம்.டி.ஏ.,வுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக, சி.எம்.டி.ஏ.,வில் அமலாக்கப்பிரிவும் உள்ளது. விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, 2007க்கு பின் சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை. ஆனால், முதல்வரின் தனிப்பிரிவு பரிந்துரை, உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் கட்டடங்கள் மீது மட்டுமே, சி.எம்.டி.ஏ., நடவடிக்கை எடுக்கிறது. பொதுமக்கள் நேரடியாக அளிக்கும் புகார்கள் என்னவாகிறது என்பது புதிராக உள்ளது. சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலராக அன்சுல் மிஸ்ரா பொறுப்பேற்ற பின், விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான புகார்களை பெறுவதை எளிமையாக்கினார். சி.எம்.டி.ஏ., சமூக வலைதள பக்கங்களில், பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள் புகார்களை பரிசீலிக்கவும், பதில் அளிக்கவும் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சி.எம்.டி.ஏ.,வின் சமூக வலைதள பக்கங்களில், விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான புகார்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், 2023 முதல் விதிமீறல் கட்டடங்களுக்கு வழங்கப்பட்ட, பணி நிறுத்த நோட்டீஸ்கள் குறித்து, பொறியாளர் ஒருவரின் கேள்விக்கு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அளித்த பதில்: சி.எம்.டி.ஏ., அனுமதி இன்றியும், அனுமதி விதிகளுக்கு மாறாகவும், கட்டுமான பணிகள் நடப்பதாக புகார் வந்தால், அங்கு அதிகாரிகள் கள ஆய்வு செய்வர். இதன் அடிப்படையில், விதிமீறலின் தாக்கம் அதிகமாக இருந்தால், பணிகளை நிறுத்த நோட்டீஸ் அளிப்பர். இதனால், விதிமீறல் கட்டட பணிகள் முழுமையாக நிறுத்தப்படும். தற்போது, இந்த நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதன்படி, புகார் தெரிவிக்கப்படும் கட்டடங்களுக்கு பணி நிறுத்த நோட்டீஸ், 2023 முதல் வழங்கப்படுவது இல்லை. அதற்கு பதிலாக, அந்த கட்டடம் விதிப்படி இருக்கிறது அல்லது அனுமதி பெறப்பட்டது என்பதற்கான ஆதார ஆவணங்களை கேட்டு, நோட்டீஸ் மட்டுமே அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.