| ADDED : ஜூன் 22, 2024 12:19 AM
சென்னை, ஒற்றை சாளர முறை அறிமுகப்படுத்திய நிலையில் அடுக்குமாடி கட்டட அனுமதி எண்ணிக்கை அதிகரித்துள்ளது என, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., தெரிவித்துள்ளது.சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:சி.எம்.டி.ஏ.,வில் கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் பணிகளை விரைவுபடுத்த, 2022 மே மாதம் ஒற்றை சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கட்டட அனுமதி கோரும் விண்ணப்பங்கள், வரைபடங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிப்பதால், உடனுக்குடன் சரி பார்க்க முடிகிறது. இதனால், கட்டுமான அனுமதி கோப்புகள் விரைந்து பைசல் செய்யப்படுகின்றன. வழக்கமாக உயரமான அடுக்குமாடி கட்டடங்கள் தொடர்பாக, ஆண்டுக்கு 65 கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு, 135 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 100 கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.உயரம் குறைந்த அடுக்குமாடி கட்டடங்கள் பிரிவில், 2022ல் 641 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 455 கட்டட அனுமதிகள் வழங்கப்பட்டன. இதுவே, 2023ல் 837 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 605 கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கட்டுமான திட்ட அனுமதி கோப்புகளை பரிசீலித்து முடிப்பதற்கான கால அவகாசம், 60 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.