சென்னை, சென்னை மாநகராட்சி விரிவாகத்திற்கு முன், 265.48 ஏக்கராக இருந்த வேளச்சேரி ஏரி, தற்போது 55 ஏக்கர் ஏரியாக சுருங்கிவிட்டது. ஏரியின் மேற்கு திசையில், 1,600 ஆக்கிரமிப்புகள் இருந்தன. இந்த ஆண்டு, 1,800 ஆக அதிகரித்துள்ளது. கிழக்கு திசையில், 450 ஆக்கிரமிப்புகள் இருந்தன. இந்த ஆண்டு, 550 ஆக அதிகரித்து உள்ளது.ஆக்கிரமிப்புகளை, தடுக்க வேண்டிய பொதுப்பணித்துறை அலுவலகமோ, 30 கி.மீ., துாரத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை பகுதியில் உள்ளது. இந்நிலையில், இந்த ஏரியை மேம்படுத்த சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான் திட்டம் முழு வடிவம் பெறும் என, ஏரி மேம்பாட்டு குழு அறிக்கை அனுப்பி உள்ளது.இதனால், ஏரிக்கரையை 'பிளாட்' போட்டு விற்றவர்களிடம், அங்கு குடியிருப்போர் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுக்கின்றனர். இதைப் பயன்படுத்தி, ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருக்க, அமைச்சர், உயர் அதிகாரிகள் வழியாக சரிக்கட்டலாம் என, ஒரு தரப்பு பண வசூலில் இறங்கி உள்ளது. மற்றொரு தரப்பு, நீதிமன்றம் வழியாக நிரந்தர தடை உத்தரவு பெறலாம் என, வீடுவீடாக சென்று பணம் வசூலிக்கின்றனர். இது குறித்து, உயர் அதிகாரிகள் கூறியதாவது:வேளச்சேரி ஏரியை மீட்டு மேம்படுத்துவது நிச்சயம். திடீர் நடவடிக்கையும் எடுக்கலாம். ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று வீடு வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும். ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருக்க சிலர், ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ளவர்களிடம் பணம் வசூலிப்பதாக தெரிய வருகிறது. யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.