| ADDED : ஜூலை 25, 2024 01:21 AM
ெஷனாய் நகர், அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட 101வது வார்டு, ஷெனாய் நகர், புல்லா அவென்யூ, 1வது குறுக்கு தெரு உள்ளது. இந்த தெருவில், மதுக்கூடத்துடன் கூடிய கடை எண்: 436 'டாஸ்மாக்' மதுபான கடை இயங்கி வருகிறது.'குடி'மகன்கள் மதுக்கூடத்தை பயன்படுத்தாமல், சாலையிலேயே அமர்ந்து மதுவருந்தி அங்கேயே அலங்கோலமாக படுப்பதும்; ஆபாச வார்த்தைகளை பேசுவதுமாக உள்ளனர்.இது குறித்து, குடியிருப்பு வாசிகள் கூறியதாவது:குடியிருப்பு பகுதியின் மத்தியில் மதுக்கூடத்துடன் 'டாஸ்மாக்' கடை உள்ளது. இங்கு மது குடிப்போர், சாலை முழுதும் ஆங்காங்கே அமர்ந்து, மதுக் கூடத்தை போல் அமர்ந்து மரு அருந்தி வருகின்றனர். குறிப்பாக, அருகில் உள்ள மாநகராட்சி கழிப்பறை, மாநகராட்சியின் உடற்பயிற்சி மையத்தின் நுழைவாயிலேயே அமர்ந்து மது அருந்தி, அங்கேயே பாட்டில்களை வீசி செல்கின்றனர்.இதை பார்த்து குடியிருப்பில் உள்ள இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லும் நிலைமை உள்ளது. அதுமட்டுமல்லாமல், அடிக்கடி போதை ஆசாமிகளால் தகராறும் ஏற்படுகிறது.குறிப்பாக, அண்ணா நகர் மண்டல அலுவலகத்தின் பின்புறத்திலேயே இப்படி நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.இதே பகுதியில், ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் இருப்பதால், இக்கடையை கடந்து தான் ரேஷன் கடை, பள்ளிகள் மற்றும் வேலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்லவே அச்சமாக இருக்கிறது.எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் வைத்து, சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள 'டாஸ்மாக்' கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக, தொடர்ந்து மண்டல அலுவலகம், கலெக்டர் உள்ளிட்டோருக்கு பல முறை மனு அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.