| ADDED : மே 31, 2024 12:55 AM
ஆலந்துார் - பெருங்குடி மண்டலத்திற்கு இடைப்பட்ட பரங்கிமலை - வேளச்சேரி உள்வட்டச்சாலையில், மேம்பால ரயில்வே திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிக்காக மொத்தம், 156 துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த துாண்களில், போஸ்டர்கள் மற்றும் விளம்பரம் வரைவதை தடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 'ஜியோ இந்தியா பவுன்டேஷன்' என்ற தன்னார்வ அமைப்பு சார்பில், முதற்கட்டமாக, 86 துாண்களில் ஓவியங்கள் வரையும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.அந்த அமைப்பைச் சேர்ந்த பிரியா கூறியதாவது:பரங்கிமலை - வேளச்சேரி மேம்பால ரயில் திட்ட துாண்களை அழகுபடுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறோம். மொத்தம் உள்ள, 156 துாண்களில், 86 துாண்களில் ஓவியம் வரைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அந்த துாண்களில் பண்டைய தமிழர் பண்பாட்டை விளக்கும் வகையிலும், பழங்கால விளையாட்டுகளை கண்முன் கொண்டு வரும் வகையிலும், ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. முழுக்க முழுக்க, 'எனாமல் பெயின்ட்' வாயிலாக வரையப்படுவதால், பல ஆண்டு காலம் நிலைத்து நிற்கும். ஒரு துாணிற்கு ஓவியம் வரைய, 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இவ்வாறு வரையப்படும் ஓவியங்கள் மீது அரசியல் கட்சியினர் சுவரொட்டிகளை ஒட்டாமல் பாதுகாக்க வேண்டும். மீறுவோர் மீது ஓவியம் வரைவதற்கு ஆகும் செலவுகளை, அபராதமாக வசூலிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.-- நமது நிருபர் --