தமிழ் மாதங்களில், 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்திரம். எனவே, 12 கை வேலவனுக்கு, பங்குனி உத்திர திருநாள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.இந்நாளில் தெய்வ திருமணங்கள் பல நடந்துள்ளதால், இது மேலும் சிறப்புக்கொண்ட நாளாகிறது. எனவே இந்த நாளை திருமண விரத நாள் எனவும், புராணங்கள் கூறுகின்றன.இதையொட்டி, சிவாலயங்களில் தீர்த்தவாரி நடைபெறும். அப்போது, புனித நீராடினால் புண்ணிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.சிவபெருமான் பார்வதியை கரம்பிடித்ததும், ஸ்ரீலட்சுமியின் அவதார தினமும் இதே பங்குனி உத்திர நாளில் தான். ஸ்ரீமகாலட்சுமி பங்குனி உத்திர விரதமிருந்துதான், திருமாலின் மார்பில் இடம்பிடித்தாள்.பிரம்மன் தன் நாவில், சரஸ்வதியை வைத்துக்கொண்டதும் பங்குனி உத்திர தினத்தில் தான். ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள்- ரங்கமன்னார் திருமண வைபவமும், இந்த நாளில் தான் நடந்தது.அந்தவகையில், பங்குனி உத்திர திருவிழா நேற்று, முருகப்பெருமான் கோவில்களில் கொண்டாடப்பட்டது.
ஆண்டவர் கோவிலில் தெப்ப திருவிழா
வடபழனி ஆண்டவர் கோவிலில், இந்தாண்டிற்கான பங்குனி உத்திர விழா, கடந்த 21ம் தேதி லட்சார்ச்சனையுடன் துவங்கியது. பங்குனி உத்திரமான நேற்று காலை தீர்த்தவாரி நடந்தது. பின், யாகசாலையில் பூர்ணாஹுதி பூர்த்தியானது. நண்பகல் மூலவருக்கு விபூதி அலங்காரம். இரவு, வடபழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி விதி உலா நடந்தது.நேற்று அதிகாலை முதல் இரவு வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால், வேல் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.பங்குனி உத்திர விழாவை அடுத்து, இன்று முதல் 27ம் தேதி வரை மூன்று நாட்கள் இரவு 7:00 மணிக்கு தெப்பத் திருவிழா சிறப்பு அலங்காரம், வேதபாராயண, நாதஸ்வர கச்சேரியுடன் நடக்கிறது.இன்றைய தெப்பத்தில் வடபழனி ஆண்டவர் புறப்பாடு நடக்கிறது. இரண்டாம் நாள் சண்முகர், வள்ளி, தெய்வானை புறப்பாடும், மூன்றாம் நாள் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடக்கிறது.- நமது நிருபர் -