உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிராட்வே பஸ் நிலையத்தில் ஒருங்கிணைந்த மையம் மாதிரி வரைபடங்கள் வெளியீடு

பிராட்வே பஸ் நிலையத்தில் ஒருங்கிணைந்த மையம் மாதிரி வரைபடங்கள் வெளியீடு

சென்னை, பிராட்வே பேருந்து நிலையத்துடன் கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த மையத்தின் மாதிரி போட்டோக்கள், நேற்று வெளியாகின. அடுத்த இரண்டு மாதங்களில், கட்டுமான பணிகள் துவங்கும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னையில் மிகவும் பழமையான பேருந்து நிலையமாக, பிராட்வே பேருந்து நிலையம் இருந்து வருகிறது.இங்கிருந்து தாம்பரம், சோழிங்கநல்லுார், பூந்தமல்லி, போரூர், திருவான்மியூர், அடையாறு, கேளம்பாக்கம், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், எண்ணுார், கோயம்பேடு, செங்குன்றம், வள்ளலார்நகர், திருவொற்றியூர் உட்பட பல்வேறு இடங்களை இணைக்கும் வகையில், 500க்கும் மேற்பட்ட பேருந்துகள், 3,000த்துக்கும் மேற்பட்ட 'சர்வீஸ்'களாக தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.பல ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இதற்கிடையே, 'பிராட்வேயில் பேருந்து நிலையம், மின்சார ரயில், மெட்ரோ சேவை உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளுடன், வணிக வளாகங்களோடு ஒருங்கிணைந்த மையம், 823 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்' என, தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தது.இதற்கான பணிகளை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் முடிந்துள்ளன.இதையடுத்து, இந்த திட்டத்திற்கான கட்டுமான பணியை மேற்கொள்ள, நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதற்கிடையே, பிராட்வே பேருந்து நிலையத்துடன் கூடிய, ஒருங்கிணைந்த மையத்தின் மாதிரி புகைப்படங்கள் நேற்று வெளியாகின.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:பிராட்வேயில் தற்போது உள்ள பேருந்து நிலையம், 823 கோடி ரூபாயில், 'மல்டி மாடல் இன்டகிரேஷன்' எனும் ஒருங்கிணைந்த முனையமாக மாற்றப்பட உள்ளது.4.42 ஏக்கர் பரப்பளவில், 10 மாடியில் ஒரு வணிக வளாகமும், பேருந்து நிலையத்துடன் கூடிய 8 மாடியில் ஒரு கட்டடமும் அமைக்கப்பட உள்ளன.அருகில் உள்ள மின்சார ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், மேம்பால ரயில் நிலையத்தையும் இங்கிருந்து இணைக்கும் வகையில், வசதிகள் ஏற்படுத்தப்படும்.மாநகர பேருந்துகள் உள்ளே வந்து செல்ல, பிரமாண்டமாக நான்கு நுழைவாயில்கள் அமைக்கப்படும்.நுாற்றுக்கணக்கான வாகனங்களை ஒரே நேரத்தில் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தங்கள், மின்துாக்கிகள், எஸ்கலேட்டர்கள், ஸ்கைவாக், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்படும். இந்த பணிகளை மேற்கொள்ள 'டெண்டர்' வெளியிட்டு, நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பின், கட்டுமான பணி மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டு, பணிகளை துவங்க உள்ளோம்.அடுத்த இரண்டு மாதங்களில் பணிகள் துவங்கி, அடுத்து மூன்று ஆண்டுகளில் இந்த பணிகள் முடிக்கப்படும். ஆரம்பத்தில் பேருந்து நிலையத்துடன் அமையும் கட்டடத்தை இரண்டு ஆண்டுகளில் கட்டி முடித்து, மீண்டும் பேருந்து நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.பிராட்வேயில் இருந்து தற்போது இயக்கப்படும் மாநகர பேருந்துகள், தற்காலிகமாக இடமாற்றம் செய்து இயக்க, மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க உள்ளது.தீவுத்திடல் அல்லது அண்ணா சாலையை ஒட்டியே வேறு ஏதாவது இடம் உள்ளதா என, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தீவுத்திடல் அரசு இடம் என்பதால், இங்கு தற்காலிக பேருந்து நிலையம் அமையும் என எதிர்பார்க்கிறோம். பேருந்து இயக்கத்திற்கான அடிப்படை வசதிகளை, சென்னை மாநகராட்சி மேற்கொண்ட பின், தற்காலிகமாக அங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வீரபத்திரன்,கருங்காலக்குடி
மே 22, 2024 08:52

ஏற்கனவே பிராட்வேயில் செயல்பட்டுக் கொண்டிருந்த பஸ் ஸடாண்டினால் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அதற்கு பதிலாக கோயம்பேடு ஒருங்கிணைந்த மையம் பஸ் ஸ்டாண்டை கொண்டு வந்தார் அதன் பிறகுதான் பிராட்வேயில் நெரிசல் குறைந்தது. இப்போது இந்த விடியா திராவிடமாடல் ஆட்சியில் அங்கு திரும்பவும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை எதற்காக கொண்டு வரவேண்டும்? ஆனால் ஒன்று மட்டும் உறுதி திமுகவினர் எது செய்தாலும் என்ன திட்டம் கொண்டு வந்தாலும் அது அவர்களுக்கு டெண்டர் மூலம் கிடைக்கும் கமிஷன் பணத்துக்காகவும் மேலும் அவர்களின் கட்சிக்காரர்களுக்கு ஆதாயம் தரும் திட்டமாகவே இருக்குமே ஒழிய எக்காரணத்தை கொண்டும் ஒருபோதும் அது தமிழக மக்களுக்கு நன்மையளிக்கும் திட்டமாக இருக்க வாய்ப்பில்லை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை