சென்னை:''புயல், மழையின்போது, நான் செய்த பணிகளை என் சமூக வலைதள பக்கங்களின் வாயிலாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்,'' என, தென்சென்னை தி.மு.க., வேட்பாளர் தமிழச்சி பேசினார்.தென்சென்னை தி.மு.க., வேட்பாளர் சுமதி என்ற தமிழச்சிக்கு ஆதரவாக, சைதாப்பேட்டை சட்டசபை தொகுதி ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று முன்தினம் ஓட்டு சேகரித்தார்.அவருக்கு தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் பெருந்திரளானோர் மேள தாளங்கள் முழங்க, மாலை அணிவித்தும் மலர் துாவியும் வரவேற்பு அளித்தனர்.அதேபோல், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், மயிலாப்பூர் தொகுதியில், தமிழச்சியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.பிரசாரத்தின்போது, வேட்பாளர் தமிழச்சி பேசியதாவது:லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதியில் பெரியார் நகரில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு 40 லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறேன்.சைதாப்பேட்டையில் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும், 55 லட்சம் ரூபாய் மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.அமைச்சர் சுப்பிரமணியனும் சைதாப்பேட்டை தொகுதியில் ஏராளமான பணிகளை செய்துள்ளார். அடையாறு ஆற்றங்கரையை பலப்படுத்துதல், ஏரிகளை துார்வாருதல் என, முக்கிய திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளன.வெள்ளத்தின்போது தி.மு.க., எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர். அவர்களுக்கு, மக்கள் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, தற்போது வீடியோ போடுவதை பிரதான வேலையாக வைத்துள்ளனர்.வெள்ளத்தின்போது, நான் வெளிவராமல் வீட்டில் உட்கார்ந்திருந்ததாக கூறுகின்றனர். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்வதன் வாயிலாக உண்மையாகிவிடாது.என் தினசரி பணிகள் அனைத்தும், சமூக வலைதள பக்கங்களில் உள்ளது. அதை பார்த்தாலே புயல், கனமழை நேரத்தில் நான் எங்கு இருந்தேன் என்பதை அறிய முடியும். வெள்ளப்பகுதிகளிலிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதிலிருந்து, நிவாரணப் பொருட்கள் வழங்குவது வரை, அனைத்து பணிகளிலும் தி.மு.க.,வினர் உடனிருந்தனர்.காங்., தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் அளிப்பதாக தெரிவித்திருப்பதும், கல்வி கடன் ரத்து, பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வருதல் உள்ளிட்ட அறிவிப்புகளும், நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் திட்டங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.