| ADDED : ஜூலை 20, 2024 01:03 AM
ஆவடி:ஆவடி சி.டி.எச்., சாலையில், இந்திரா காந்தி தெரு அருகே பட்டாபிராம் பேருந்து நிறுத்தம் உள்ளது. இப்பேருந்து நிறுத்தத்தை ஒட்டி, கழிவுநீர் ஓடை செல்கிறது. பட்டாபிராம், தேவராஜபுரம் மற்றும் பட்டாபிராம் போலீஸ் குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவு நீர், மேற்கூறிய கழிவுநீர் ஓடை வழியாக, 100 மீ., துாரத்தில் உள்ள கால்வாயில் கலக்கிறது.கடந்த இரு வாரங்களுக்கு முன், கழிவுநீர் செல்ல வழியின்றி, பட்டாபிராம் பேருந்து நிறுத்தம் அருகே ஆறாக ஓடியது. புகாரின்படி, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை அகற்றி துாய்மைப்படுத்தினர். இப்பணிகளின் போது, பேருந்து நிறுத்தத்தில் இருந்த இருக்கைகளை அகற்ற வேண்டி இருந்தது.இதனால், கழிவுநீர் பிரச்னை தற்காலிகமாக தீர்ந்தது. ஆனால், பேருந்து நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், தோண்டப்பட்ட இடத்தில் கழிவுநீர் செல்ல ஏதுவாக குழாய் பொருத்தி, பேருந்து நிறுத்தத்தை மழைக்கு முன் சீரமைக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.