| ADDED : ஆக 06, 2024 01:16 AM
சென்னை, மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான மெட்ரோ ரயில் தடத்தில், சேத்துப்பட்டில் இருந்து ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு வரையிலான சுரங்கப்பாதை தோண்டும் பணி நேற்று முடிந்தது.மாதவரம் ---- சிறுசேரி சிப்காட் மெட்ரோ ரயில் தடத்தில், கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான 12 கி.மீ., துாரம் சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, எட்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.சேத்துப்பட்டு நிலையத்தில் இருந்து ஸ்டெர்லிங் சாலை நோக்கி, கடந்த ஆண்டு செப்.,9ம் தேதி சுரங்கப்பாதை பணி துவங்கியது. இதற்காக, சிறுவாணி என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இந்த இயந்திரம், சேத்துப்பட்டு நிலையத்தில் இருந்து ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு வரை 703 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை நேற்று முடித்தது. இந்த இயந்திரம், கூவம் ஆற்றின் அடியில் 8.0 மீட்டர் ஆழத்தில் 51 மீட்டர் நீளத்தை வெற்றிகரமாக கடந்தது. இந்த சுரங்கப்பாதை பணி நிறைவு நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ச்சுனன், பொதுஆலோசகர் டோனி புர்செல், பொது ஆலோசகர் லத்தீப் கான் உள்பட பலர் பங்கேற்றனர்.