போரூர், வளசரவாக்கம் மண்டலம், போரூர் 153வது வார்டு ராமகிருஷ்ணா நகர் ஹரிவரசன் சாலையில் சமூக நலக்கூடம் அமைந்துள்ளது. இது போரூர் பேரூராட்சியாக இருந்தபோது, 2010 -- 2011ல் கட்டப்பட்டது. போரூர் பேரூராட்சி சென்னை மாநகராட்சியுடன் இணைந்த பின், இப்பகுதி வளசரவாக்கம் மண்டலம், 153வது வார்டில் வருகிறது. அப்போது, அம்மா உணவகத்தில் சப்பாத்தி செய்ய, ‛சென்ட்ரல் கிச்சன்' இந்த சமூக நலக்கூட்டத்தில் அமைக்கப்பட்டது. சப்பாத்தி செய்ய, 1.5 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டு, பழுதடைந்த இயந்திரங்கள் இந்த சமூக நலக்கூடத்தில் உள்ளன. பல்வேறு காரணங்களால், சப்பாத்தி சென்டர் அங்கிருந்து அகற்றப்பட்டும், சமூக நலக்கூடத்தை புனரமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை.இந்த நிலையில், ஓராண்டிற்கு முன் மீண்டும் சமூக நலக்கூடமாக மாற்றி, கட்டடத்தின் மாடியில், ‛டைனிங் ஹால்' அமைக்க 40 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் விடப்பட்டது.இதையடுத்து, சமூக நலக்கூடத்தின் மாடியில் இரும்பு ஷீட் வாயிலாக டைனிங் ஹால் அமைக்கப்பட்டது. அதற்கு பின், பணிகள் முறையாக மேற்கொள்ளாமல் அரைகுறையாக கிடப்பில் போடப்பட்டன.தற்போது, சமூக நலக்கூடம் மூடப்பட்ட நிலையில் உள்ளது. எனவே, இந்த சமூக நலக்கூடத்தை சீர் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து, புதர்மண்டி கிடந்த சமூக நலக்கூட வெளிப்புற பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், விரைவில் சமூக நலக்கூடம் சீரமைக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.