| ADDED : மே 11, 2024 12:15 AM
சேலையூர், வேங்கைவாசல் ஊராட்சியில், முழுமையாக மழைநீர் கால்வாய் கட்டப்படாததால், சாலையில் நாள்தோறும் ஆறாக ஓடும் கழிவுநீரால், அப்பகுதிவாசிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.சேலையூரை அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில், 5வது வார்டு, விக்னராஜபுரம், 1வது பிரதான சாலையில், ஜனவரி மாதம் மழைநீர் கால்வாய் கட்டும் பணி துவங்கியது.சாலையின் பாதிவரை கால்வாய் கட்டப்பட்டு, பின் அப்படியே விட்டு விட்டனர். இதனால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் முழுதும் தேங்கி, நாள்தோறும் சாலையில் ஆறாக ஓடுகிறது.பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என, அனைவரும் கழிவுநீரிலேயே நடந்து செல்லும் சூழல் உள்ளது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.இதுகுறித்து புகார் தெரிவித்தும், கால்வாயை முழுமையாக கட்ட நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தலையிட்டு, பாதியில் நிற்கும் கால்வாய் பணியை முழுமையாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.