பாண்டி பஜார், தி.நகர் தீயணைப்பு நிலையம், உஸ்மான் சாலையில் உள்ள, எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, போதிய இட வசதியில்லை.மேலும், தி.நகரில் மேம்பாலத்தின் கீழ் உள்ள நடைபாதை கடைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, தீயணைப்பு வாகனம் வெளியேறுவதில் சிக்கல் உள்ளது.தற்போது, அப்பகுதியில் புது மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. இதனால், தி.நகர் உஸ்மான் சாலை எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு, சாலை மூடப்பட்டுள்ளது.இதனால், அவசர நேரத்தில் தீயணைப்பு வாகனத்தை ஓட்டிச் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.இது குறித்து, தீயணைப்பு துறையினர் கூறியதாவது:தீயணைப்பு வாகனம் வந்து செல்வதற்காக மட்டும், அவ்வப்போது, எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே தடுப்புகள் அகற்றப்படுகின்றன. அதுவும் குறுகிய வழியாக இருப்பதால், தீயணைப்பு வாகனம் வந்து செல்ல, மிகவும் சிரமமாக உள்ளது.தவிர, மேம்பால பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 'பொக்லைன்' இயந்திரங்களை நகர்த்தி செல்வதற்குள் நேரமாகி விடுகிறது. அவசர அழைப்பின் போது, தீயணைப்பு வளாகத்தில் இருந்து, தீயணைப்பு வாகனம் வெளியேறவே, அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.இந்நிலையில், பாண்டி பஜார் காவல் நிலையம் அருகே, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்காக புது கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மூன்று மாடிகள் உடைய இக்கட்டடம், ஆறு மாதங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், முதல்வர் தேதி கிடைக்காமல், இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இந்த தீயணைப்பு நிலைய கட்டடத்தை திறந்தால், அவசரத்திற்கு செல்ல எளிதாக வழி கிடைக்கும்; அக்கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.