| ADDED : மே 08, 2024 12:03 AM
திருவொற்றியூர், தமிழகத்தில், பிப்ரவரி மாதம் துவக்கம் முதலே, கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த மாதம் வெயில் தாக்கம் அதிகரித்தது. தற்போது, அக்னி நட்சத்திர நாட்களில் வெப்ப அலை வீசி வருகிறது.இதனால், பகல் வேளைகளில் மக்கள் வெளியே நடமாடுவதை, தவிர்க்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியது. இதன் காரணமாக, முற்பகல் 11:00 மணி முதல் மாலை 4:00 வரையிலும், பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில், மணலி விரைவு சாலை, மாதவரம் விரைவு சாலைகளில், வெயில் காரணமாக சாலையோரம் திடீரென பல சர்பத் உள்ளிட்ட குளிர்பான கடைகள் முளைத்துள்ளன.ஒரு சிலர் லாப நோக்கம் கருதி, தரமற்ற பொருட்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதில் தயாரிக்கப்படும், சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்களை பருகுவோர், உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.இதனால், இந்த சர்பத் கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சர்பத் கலவைகள் தரமானதா என, ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.எனவே, வாட்டி வதைக்கும் வெயிலுக்கு இதமாக முளைக்கும் இதுபோன்ற கடைகளுக்கு, தரமான பொருட்களை பயன்படுத்தும்படி அறிவுறுத்தலும், வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வழங்க வேண்டியது கட்டாயமாகும்.