சோழவரம்:சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை 6:30 மணிக்கு, தடம் எண்: 112பி அரசு பேருந்து செங்குன்றம் வழியாக சத்தியவேடு பகுதி நோக்கி புறப்பட்டது. பேருந்தை எத்திராஜ், 55, ஓட்டினார்; நடத்துனராக வெங்கடேசன், 46, பணியில் இருந்தார்.சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சோழவரம் அடுத்த செம்புலிவரம் அருகே செல்லும்போது, கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி லோடு வேன், மீடியனை கடந்து எதிர் திசையில் வந்தது.சுதாரித்த அரசு பேருந்து ஓட்டுனர், விபத்தை தவிர்க்க பேருந்தை இடதுபுறமாக திருப்பினார். அதற்குள் பேருந்தின் பக்கவாட்டில் மோதி, உரசியபடி லோடு வேன் சென்றது.இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, இடதுபுற தடுப்பு சுவரை உடைத்து அணுகுசாலையில் பெட்ரோல் 'பங்க்' சுவரில் மோதி நின்றது. இதில், பேருந்தின் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த, பொன்னேரி அடுத்த வடக்குநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த சுதா, 45, என்பவரின் தலையில் கம்பி குத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்திற்கு காரணமான லோடு வேன் ஓட்டுனர் தோஸ்த், 35, மற்றும் பேருந்தில் பயணித்த நான்கு பேர் காயம் அடைந்தனர்.செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்து, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.