அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி அருகில் செல்லும் விருகம்பாக்கம் கால்வாய், போதிய பராமரிப்பின்றி புதர் மண்டியுள்ளது. இதனால் நீரோட்டம் தடைபட்டு, குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழும் அபாயம் நிலவுகிறது. சென்னையில் கூவம், அடையாறு மற்றும் பகிங்ஹாம் கால்வாய் போன்று, விருகம்பாக்கம் கால்வாயும் முக்கிய நீர்வழித்தடம்.அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட 106 - 107வது வார்டு அரும்பாக்கம் அருகில், சூளைமேடு பாரி தெரு வழியாக விருகம்பாக்கம் கால்வாய் செல்கிறது.நெற்குன்றத்தில் துவங்கும் இக்கால்வாய் அரும்பாக்கம், சூளைமேடு, எம்.எம்.டி.ஏ., காலனி வழியாக, அமைந்தகரை கூவத்தில் கலக்கிறது.இக்கால்வாயை முறையாக சீரமைக்காததால், கால்வாய் முழுதும் குப்பை மற்றும் கழிவுகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, 106வது வார்டு அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி அருகில், சூளைமேடு பத்மநாப நகர், தமிழர் வீதியில் செல்லும் கால்வாயில் முட்செடிகள் வளர்ந்து, புதர் மண்டி காட்சியளிக்கிறது.இதுகுறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:மாநகராட்சியின் அலட்சியத்தால், விருகம்பாக்கம் கால்வாயில் தொடர்ந்து, சுகாதார சீர்கேடு நிலவுகிறது. குறிப்பாக, சூளைமேடு பாரி தெருவில், தரைப்பாலத்தில் பல நாட்களாக குப்பை தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுகிறது. தமிழர் வீதியில் கால்வாய் இருப்பதே தெரியாத அளவிற்கு, செடிகள் வளர்ந்து காலி மனை போல் காட்சியளிக்கிறது. இதனால் பருவ மழையின் போது, நீரோட்டம் பாதிக்கப்பட்டு, அருகில் உள்ள குடியிருப்பில் வெள்ளம் சூழ வாய்ப்புள்ளது.முட்புதர், குப்பை கழிவுகளை விரைந்து அகற்றி, சுகாதார பாதிப்பை தடுத்து, நிரந்தர தீர்வு கிடைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.