| ADDED : ஆக 06, 2024 12:46 AM
சென்னை, பொதுமக்கள் வீடு கட்டுவதற்கான அனுமதியை, தங்கள் சுயசான்று அடிப்படையில், இணைய வழியில் ஒப்புதல் அளிக்கும் நடைமுறையை, சென்னை மாநகராட்சி கடந்த மாதம் துவங்கியது. இதில், கட்டண குழப்பங்கள் உள்ளதாக புகார்கள் எழுந்தன.இந்நிலையில், சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னையில் வீடு கட்ட, திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதியை மாநகராட்சியிடம் இருந்து, பொதுமக்கள் பெற வேண்டும். இதில் பல்வேறு முரண்பாடுகள் நிலவியதால், அதை எளிமையாக்கி, சுயசான்று அடிப்படையில் இணையம் வாயிலாக அனுமதி பெறும் திட்டத்தை, கடந்த ஜூலை 22ல் முதல்வர் துவக்கினார்.ஏற்கனவே நடைமுறையில் இருந்த கட்டணத்திற்கும், சுயசான்று அடிப்படையில் வழங்கப்படும் அனுமதிக்கான கட்டணத்திற்கும் வேறுபாடு இல்லை.இத்திட்டத்தில் 2,500 சதுர அடி இடத்தில் 3,500 சதுர அடி வரை தரைத்தளம் மற்றும் முதல் தளம் உள்ள வீடு கட்ட, கூர்ந்தாய்வு மற்றும் உள்கட்டமைப்பு கட்டணம் இல்லை.ஒரு சதுர மீட்டருக்கு வளர்ச்சி கட்டணம் 15 ரூபாய், கட்டட அனுமதி கட்டணம் 600 ரூபாய், தமிழ்நாடு கட்டுமான நிறுவன கட்டணம் 267 ரூபாய், தொழிலாளர் நல நிதி கட்டணம் மற்றும் சாலை வெட்டு சீர் செய்ய 194 ரூபாய் கட்டணம் ஆகியவை செலுத்தினால் போதும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.