காசிமேடு,சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கன்டெய்னர் லாரி ஓட்டுனர்களிடம் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபடும் வழிப்பறி திருடர்களை பிடிக்கக்கோரி, கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர். கஞ்சா ஆசாமிகள்
கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலர் சுரேஷ்பாபு, காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மணலி, மாதவரம், பொன்னேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சரக்குகள் ஏற்றி, தினமும் 1,000க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் சென்னை துறைமுகத்திற்கு செல்கின்றன.டோல்கேட்டில் இருந்து துறைமுகம் ஜீரோ கேட் வரை செல்லும் லாரிகள், இரவில் வரிசைக்கட்டி நிறுத்தப்படுகின்றன. லாரி ஓட்டுனர்கள் மற்றும் கிளீனர்கள் லாரியிலே துாங்குகின்றனர்.அதிகாலை 2:00 மணி முதல் 4:00 மணிக்கு இடைப்பட்ட வேளையில், அங்கு வரும் 18 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்ட கஞ்சா போதை ஆசாமிகள், கத்திமுனையில் ஓட்டுனர்களை தாக்கி மொபைல் போன், பணம் உள்ளிட்டவற்றை பறித்து செல்வது தொடர்கதையாக உள்ளது. நேற்று முன்தினம் ஜீரோ கேட்டில் நின்றிருந்த திருவாரூர் மாவட்டம் சோமசேகரபுரத்தைச் சேர்ந்த ஓட்டுனர் சோழன், 34, உட்பட நான்கு ஓட்டுனர்களிடம் மொபைல் போன்களை திருடி உள்ளனர். பாதுகாப்பு வேண்டும்
உடனடியாக, லாரி ஓட்டுனர்கள் அவசர உதவி எண் 100க்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் போலீசார் விரைந்து வந்து, இரு இளைஞர்களை கைது செய்தனர்.இதுபோன்ற நிகழ்வுகள்நடக்காமல் கண்காணிக்க வேண்டும். துறைமுக சாலையில் கன்டெய்னர் லாரி ஓட்டுனர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். தினமும் இரண்டு காவலர்களை நியமித்து, 24 மணி நேரமும் முழு கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்ட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஏசி' மெக்கானிக் கைது
லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், லாரி ஓட்டுனர் சோழனிடம் கத்திமுனையில் பணம் பறித்த மர்ம நபர்கள் குறித்து, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விசாரித்தனர். இதில், சம்பவத்தில் ஈடுபட்டது பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தனியார் கல்லுாரி மாணவர் மோசஸ், 21, காசிமேடு பகுதியைச் சேர்ந்த 'ஏசி' மெக்கானிக் ரியாஸ், 24, ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.