உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிளாட் போடப்பட்டதா உத்தண்டி கடற்கரை? காம்பவுண்டு சுவருடன் கட்டுமானம் ஜோர்!

பிளாட் போடப்பட்டதா உத்தண்டி கடற்கரை? காம்பவுண்டு சுவருடன் கட்டுமானம் ஜோர்!

சென்னை:சென்னையில், மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரையை போல், இ.சி.ஆர்., பகுதியில் உள்ள கடற்கரைகளும், பொழுதுபோக்கு இடமாக மாறி வருகிறது.குறிப்பாக, நீலாங்கரை முதல் பனையூர் வரை உள்ள ஒவ்வொரு தெருக்களும், கடற்கரையில் முடிகின்றன. இதனால், பொதுமக்கள் இங்கு அதிகம் செல்கின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் வந்து செல்லும் உத்தண்டி, சீசோர் அவென்யூ கடற்கரையில் அத்துமீறி கட்டுமான பணி நடக்கிறது. கடல் அலையில் இருந்து, 10 அடி துாரத்தில், சுற்றி காம்பவுண்ட் எழுப்ப, மணலில் குழி தோண்டி கான்கிரீட்டால் தரை பலப்படுத்தப்பட்டு உள்ளது. மற்றொரு திசையில் கம்பி கட்டி, சுவர் எழுப்பும் பணி நடக்கிறது. கடற்கரையில் இருந்து, 500 மீட்டர் தொலையில் எந்த கட்டுமான பணிகளும் நடக்கக்கூடாது என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதை மீறி கட்டடம் கட்டுவது, கடற்கரை பாதுகாப்புக்கு கேள்விக்குறியாகி விடும் எனவும், இதை தடுத்து நிறுத்தக் கோரி மாநகராட்சி மண்டல அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும், பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து, பகுதிமக்கள் கூறியதாவது:உத்தண்டி கடற்கரையில் கட்டுமான பணி நடக்க போவதாக அறிந்த உடனே, மாநகராட்சி உதவி செயற்பொறியாளரிடம் புகார் தெரிவித்தோம். அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. கட்டுமான பணி துவங்கியதும், மீண்டும் கூறினோம். அப்போதும் பொறியாளர்கள், எந்த பதிலும் கூறாமல் மெத்தனமாகவே இருந்தனர். சம்பவ இடத்தை சாதாரண மக்கள் பார்வையிட்டாலே அப்பட்டமான கடற்கரை ஆக்கிரமிப்பு என தெரிந்துவிடும். மண்டல பொறியாளர்களுக்கு எப்படி தெரியாமல் போனது என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. எனவே, மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு, கடற்கரை கட்டுமானத்தை இடித்து அகற்றுவதோடு, சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கட்டுமானத்தை அகற்றுவதற்கு ஏற்படும் அனைத்து செலவையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளே ஏற்க வேண்டும். மீண்டும் இது போல், வேறு எங்கேயாவது கட்டுமான பணி நடக்கிறதா எனவும் ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மண்டல அதிகாரிகளிடம் கேட்டபோது, 'புகார் வந்தது உண்மை தான். சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்யவில்லை. கட்டுமான பணி நடந்தது உண்மையென்றால், அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
ஜூன் 30, 2024 19:45

இரண்டாண்டுக்குள் தமிழ்நாட்டையெ கூறு போர்த்து விற்று விடுவார்கள். திராவிட கில்லாடிகள்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ