சென்னை, ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, பூணுால் மாற்றும் வைபவம் சென்னை, புறநகர் பகுதிகளிலுள்ள கோவில்கள், மண்டபங்களில் நேற்று விமரிசையாக நடந்தது.ஆவணி அவிட்டம் எனும் ஆண்டுச் சடங்கு, உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள், ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடு.இது ரிக், யஜூர்வேதிகள் கொண்டாடும் தினம். சாம வேதிகள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் கொண்டாடுவர். இந்நாளில் அனைவரும் இத்தகைய சடங்கை உருவாக்கியவர்களுக்கு நன்றி கூறி, தர்ப்பணம் செய்வர்.மூதாதையருக்கு எள், அரிசி, நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின், தாங்கள் அணிந்துள்ள பூணுாலைப் புதுப்பிப்பதோடு, வேதங்களை படிக்கவும் தொடங்குவர்.இந்த சடங்கு சமஸ்கிருதத்தில், 'உபாகர்மா' என அழைக்கப்படுகிறது. இதன் பொருள் துவக்கம். அந்த வகையில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மாம்பலம், நங்கநல்லுார், மடிப்பாக்கம், அஸ்தினாபுரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில், பிரசித்தி பெற்ற கோவில்கள், மடங்களில் பிராமணர்கள் பூணுால் மாற்றி, வேதங்களை படிக்க துவங்கினர். இன்று, காயத்ரி மந்திரம் ஜபிக்கின்றனர்.