| ADDED : மே 31, 2024 12:11 AM
ஆலந்துார், மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட வாகன சோதனையில், விதிமுறை மீறிய 169 வாகனங்களுக்கு, 14.27 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது; 10 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டன.சென்னை, ஆலந்துாரில் மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம், இயங்கி வருகிறது. அதன் ஆர்.டி.ஓ., சுந்தரமூர்த்தி மேற்பார்வையில், ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில், கடந்த இரண்டு மாதங்களில், 520 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.இந்த சோதனையின் போது அதிக பாரம் ஏற்றுவது, அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, உரிய ஆவணங்கள் புதுப்பிக்காமல், இல்லாமல் இருப்பது உள்ளிட்ட விதிமுறைகளை மீறிய, 169 வாகனங்களுக்கு, சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, அபராதமாக, 14.2 லட்சம் ரூபாய் விதிக்கப்பட்டது.இதில், அதிக பாரம் ஏற்றிய 22 வாகனங்கள், அதிவேகமாக இயக்கப்பட்ட 12 வாகனங்கள் அடங்கும். ஆவணங்களே இல்லாத 10 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டன. அபராத தொகையில், 97,000 ரூபாய் உடனடியாக வசூலிக்கப்பட்டது.