உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அறத்தை பின்பற்றாத சமுதாயம் அழியும்: மா.கி.ரமணன் பேச்சு

அறத்தை பின்பற்றாத சமுதாயம் அழியும்: மா.கி.ரமணன் பேச்சு

சென்னை, ''அறத்தை பின்பற்றாத சமுதாயம் அழியும். இந்த சமூகம், அறத்தில் இருந்து விலகி செல்கிறது. கடவுள் அறத்தையும், அறத்தை பின்பற்றுபவர்களையும் வாழ வைக்க வேண்டும்,'' என, பாரதி பாசறை நிறுவனர் மா.கி.ரமணன் கூறினார்.திருவொற்றியூர் பாரதி பாசறை நிறுவனர் மா.கி.ரமணன் எழுதிய, 'அகம் புறம் அறம்' நுால் அறிமுகம் விழா, எஸ்பிளனேடு, ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்ற வளாகத்தில் நேற்று மாலை நடந்தது.நிகழ்ச்சியில், பிர்லா கோளரங்கம் முன்னாள் இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் தலைமை உரையாற்றினார். சட்ட கல்லுாரி மாணவி ஒற்றியூர் சக்தி சிற்றுரை ஆற்றினார்.நுாலை வெளியிட்டு, திருவொற்றியூர் பாரதி பாசறை நிறுவனர் மா.கி.ரமணன் கூறியதாவது:தமிழ் இலக்கியத்தில் அகம், புறம் என அழகாக பிரித்து வைத்தனர். தனிப்பட்ட வாழ்க்கையை அகம் என்றும், சமுதாய வாழ்க்கையை புறம் என்றும் பிரித்து வைத்தனர். இரண்டிற்கும் அடிப்படையாக இருப்பது அறம். அறம் என்றால் ஒழுங்கு.ஆனால் இந்த காலக்கட்டத்தில், அவை தடம் மாறி செல்வதால் தான், நான் இந்த நுாலை எழுதி உள்ளேன். சமுதாயத்தில் அறம் என்பது ஆணித்தரமானது; அசைக்க முடியாதது.ஆனால் அந்த அறத்தை, நாம் சட்டங்கள் மூலம் காப்பாற்ற முடியாது. மனிதர்கள் தான் காப்பாற்ற வேண்டும். வாழ்க்கையின் அகத்திற்கும், புறத்திற்கும் இடையே இருப்பது அறம்.பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்.பண்புடையவர்களை மதிக்கின்ற சமூகம் இல்லையென்றால், பூகம்பம் வரும் என்பது, வள்ளுவர் கருத்து. எனவே, அனைவரும் அறத்துடன் வாழ வேண்டும். அற சிந்தனையுடன் வாழ வேண்டும் என்பதை தான், இந்த நுாலில் நான் வலியுறுத்தி உள்ளேன். எனவே தான், இந்த நுால் அனைவராலும் விரும்பப்படுகிறது.அறத்தை பின்பற்றாத சமுதாயம் அழியும். இந்த சமூகம் அறத்தில் இருந்து விலகிச் செல்கிறது. கடவுள் அறத்தையும், அறத்தை பின்பற்றுபவர்களையும் வாழ வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை