திருவொற்றியூர்,வீட்டின் பூட்டை உடைத்து, 23 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள், கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை, திருவொற்றியூர், ராமசாமி நகரைச் சேர்ந்த முத்துசாமி, 60, மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு, தங்கராஜா, மகாராஜா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி, மனைவி, பிள்ளைகளுடன், தந்தையுடன் கூட்டுக்கும்பமாக வசிக்கின்றனர். இந்நிலையில், 8 ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு, குடும்பத்துடன் சென்றிருந்தனர். நேற்று காலை, திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த தங்கம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போயிருந்தது. அதன்படி, மகாராஜாவின், 7.5 சவரன் தங்க நகைகள், 15 ஆயிரம் மதிப்புகள் வெள்ளிப் பொருட்கள். தங்கராஜாவின், 15.5 சவரன் தங்க நகைகள், 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் ஆகியவை, கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.இது குறித்து தகவலறிந்த சாத்தாங்காடு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 'சிசிடிவி' காட்சி பதிவுகளை கைப்பற்றி, விசாரிக்கின்றனர். அதில், கொள்ளையர்கள் கடப்பாரையால், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, கைவரிசை காட்டியிருப்பது பதிவாகியுள்ளது. மேலும், கைரேகை பிரிவு உதவி ஆய்வாளர் ஹரிஹரன் தலைமையிலான நிபுணர்கள், கைரேகை பதிவுகளை கைப்பற்றி விசாரணை செய்ததில், மூன்று பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.