| ADDED : நவ 18, 2025 04:43 AM
அயனாவரம்: பூர்வீக சொத்து தொடர்பான பிரச்னையால், தங்கையை கத்தியால் வெட்டிய அண்ணனை, போலீசார் கைது செய்தனர். அயனாவரம், அப்பாதுரை 2வது தெருவைச் சேர்ந்தவர் ஹேமாவதி, 40. இவர், தனது பூர்வீக வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். அதே வீட்டில், இவரது அண்ணன் அமுதவாணன், 48, என்பவரும் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர்கள் வசிக்கும் பூர்வீக வீடு தொடர்பாக, அண்ணன் - தங்கைக்கு இடையே பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று ஹேமாவதியை வீட்டை காலி செய்ய சொல்லி, அமுதவாணன் பிரச்னை செய்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த அமுதவாணன், வீட்டில் இருந்த கத்தியால், ஹேமாவதியை வெட்டினார். இதனால், ஹேமாவதிக்கு வலது கை நடுவிரலில் வெட்டு காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஹேமாவதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அயனாவரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, அமுதவாணனை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.