சென்னை:வெளியூர்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள், மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கம், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கியுள்ளன.சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இதையடுத்து வெளியூர் செல்லும் பேருந்துகளை, கிளாம்பாக்கத்துக்கு மாற்றும் பணிகள் துவங்கியுள்ளன.இந்நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்க துவங்கியுள்ளன.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் நேற்று, கிளாம்பாக்கத்தில் பயணியரை இறக்கிவிட்டன.அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தைத் தவிர்த்து, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கும் விழுப்புரம், கும்பகோணம் மற்றும் சேலம் பேருந்துகளும், பெங்களூரு நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயங்கும் பேருந்துகளும் வழக்கம்போல், கோயம்பேட்டில் இருந்தே இயக்கப்படுகின்றன.சென்னை மாநகர பேருந்துகள், நேற்று காலையிலிருந்து சென்னையில் எல்லா பகுதிகளுக்கும், கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப் படுகின்றன.ஏற்கனவே உள்ள வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளை தாண்டி, கூடுதலாக பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மாநகர போக்குவரத்துக் கழகத்தைப் பொறுத்தவரை, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு, 270 நடைகள் இயக்கப்படும். ஐந்து நிமிடங்களுக்கு ஒரு பேருந்து, கிளாம்பாக்கத்திலிருந்து, கோயம்பேடு செல்லும்.தாம்பரத்திற்கு இரண்டு நிமிடங்களுக்கு ஒரு பேருந்து செல்லும், மூன்று நிமிடங்களுக்கு ஒரு பேருந்து கிண்டி வரை இயக்கப்படும். இந்த வகையில், 1,691 நடைகள் கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.பொங்கலுக்கு பின், அனைத்து வெளியூர் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டும் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்காக ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவை பொங்கல் வரை கோயம்பேட்டில் இருந்தும், கிளாம்பாக்கத்தில் இருந்தும் இயக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூடுதல் தொகை திருப்பி தரப்படும்!
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால், அரசு விரைவு பேருந்துகளின் பயண துாரத்தில், 20 கி.மீ., வரை குறையும்.இது தொடர்பாக, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:திருச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. ஏற்கனவே சென்னை கோயம்பேடு, தாம்பரம் மற்றும் பெருங்களத்துாரில் இருந்து ஏறும் வகையில், விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்தோர், நேரடியாக கிளாம்பாக்கத்திற்கு வர வேண்டும் என, குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. இணைய வழியில் முன்பதிவு செய்தோருக்கு, கோயம்பேடில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான வித்தியாசத் தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.