சென்னை : தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடகு வைத்துள்ள தங்க நகைகளை மீட்பதிலும், அதனை மறு அடகு வைத்து, கூடுதல் தொகை பெறுவதிலும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உலகின் மிகப்பெரிய பரஸ்பர நிதி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் தங்களின் கையிருப்பை, தங்கத்தில் முதலீடு செய்வதையே விரும்புகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்வது தான் பாதுகாப்பானது என்ற கருத்து, உலகம் முழுவதும் மேலோங்கி வருகிறது. இதனால், தங்கத்திற்கான தேவை மற்றும் விற்பனை, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்.,1ம் தேதி, ஒரு கிராம் தங்கத்தின் விலை, 1,528 ரூபாய். ஒரு சவரன் விலை, 12,224 ரூபாய். தற்போது, ஒரு கிராம் விலை, 2,581 ரூபாயாக உயர்ந்து, ஒரு சவரன் விலை, 20 ஆயிரத்து 648 ரூபாயாக அதிகரித்துள்ளது. நான்கு மாதத்திற்குள், ஒரு கிராம் தங்கத்தின் விலை, 1,053 ரூபாயும், ஒரு சவரனுக்கு, 8,424 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. எந்த முதலீட்டு திட்டத்திலும், குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு பணம் இரட்டிப்பாக வாய்ப்பு இல்லை. தங்கத்தின் விலை அபரிமிதமாக உயர்ந்து வருவது, நடுத்தர மக்கள் மத்தியிலும், பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட செலவுக்காக, தங்கள் வசமிருந்த தங்கத்தை அடகு வைத்து, பணம் பெற்றவர்கள் தற்போது, அதை மீட்டு வருகின்றனர். அடகு வைக்கப்பட்ட தங்கத்தை இழந்து விடக்கூடாது என்பதும், மறு அடகு வைத்தால், தங்கத்தின் விலை உயர்வுக்கு ஏற்ப, கூடுதல் தொகை கிடைக்கும் என்பதும் இதற்கு காரணம். இன்னும் சிலர் கையிருப்பில் உள்ள தங்கத்தை, புதிதாக மாற்றுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதே சமயம், பழைய நகைக்கு மாற்று நகை வாங்காமல் அதை, நகைக்கடைகளில் விற்கும் போது, உரிய விலை கிடைப்பதில்லை. உதாரணமாக, ஒரு சவரன், 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது என்றால், நகையை விற்கும் போது, 18 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையே தருகின்றனர். இதுகுறித்து, பேசிய சென்னை, தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷலானி, 'தங்கத்தை பொறுத்தவரை உற்பத்தி, கையிருப்பு, தேவை என, அனைத்தும் சமநிலையில் இருக்க வேண்டும். இதில், ஒன்றில் மாற்றம் ஏற்பட்டாலும், தங்கத்தின் விலை உயர்ந்து விடும். தங்கம் விலை உயர்வது, மக்களிடத்தில் விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்துள்ளது' என்றார்.