உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / "ராகிங்கை தடுக்க கல்லூரிகளில் புகார் பெட்டி சென்னை புறநகர் கமிஷனர் ராஜேஷ்தாஸ் தகவல்

"ராகிங்கை தடுக்க கல்லூரிகளில் புகார் பெட்டி சென்னை புறநகர் கமிஷனர் ராஜேஷ்தாஸ் தகவல்

பரங்கிமலை : கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க கல்லூரிகளில் புகார் பெட்டி வைக்கப்படும். எனவே, மாணவர்கள் தைரியமாக புகாரை எழுதி போடலாம் என்று சென்னை புறநகர் கமிஷனர் ராஜேஷ்தாஸ் கூறினார்.இது குறித்து புறநகர் கமிஷனர் ராஜேஷ்தாஸ் கூறியதாவது:புதிய மாணவர்கள் சேர்க்கையை தொடர்ந்து, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. கல்லூரியில் ராகிங் நடப்பதை தடுக்க துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். ஒவ்வொரு கல்லூரியிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டு, தினமும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, கல்லூரி மாணவர்கள் தைரியமாக புகாரை எழுதி போடலாம். மேலும், பஸ் நிறுத்தங்களில் ஈவ்-டீசிங்கில் ஈடுபடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். சமீபகாலமாக சங்கிலி பறிப்புகளில் கல்லூரி மாணவர்களும் இறங்கியுள்ளனர்.இதனால், சங்கிலி பறிப்பு சம்பவங்களை தடுக்க புதிய முயற்சி மேற்கொண்டுள்ளோம். பொதுமக்கள் அதிகமாக கூடும் கோவில், கல்லூரி, பஸ் நிறுத்தம், மார்க்கெட் ஆகிய இடங்களில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.இத்தனிப்படையில் பெண் போலீஸ் ஒருவர், இரண்டு ஆண் போலீஸ் மற்றும் குற்றப்பிரிவு எஸ்.ஐ., ஆகியோர் மாறுவேடத்தில் இருப்பர்.குற்றவாளிகளை பொறி வைத்து பிடிக்கும் வகையில் மடிப்பாக்கம், ராமலிங்கம் நகரில் பெண் போலீஸ் ஜானகி, கழுத்து நிறைய கவரிங் நகைகளை அணிந்து சென்றார். பெண் போலீசுக்கு முன்னும், பின்னும் மாறுவேடத்தில் போலீசார் சென்றனர். அப்போது, பைக்கில் வந்த மூன்று பேர் பெண் போலீசின் கழுத்தில் இருந்த நகைகளை பறிக்க முயற்சித்தனர். பெண் போலீஸ் ஒரு கையில் நகையை பிடித்துக் கொண்டு, மர்ம நபர்களுடன் போராடிக் கொண்டிருந்தார். இதை நீண்ட தூரத்தில் இருந்து கண்காணித்த மற்ற போலீசார் வேகமாக ஓடிவந்தனர். இதை கண்ட மர்ம நபர்களில் இருவர் பைக்கை போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.போலீசில் சிக்கிய மர்ம நபர் வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த காத்தவராயன் மகன் காமேஸ்வரன், 28, தப்பி ஓடிய கூட்டாளிகள் பப்லு மற்றும் பார்த்திபனுடன் சேர்ந்து, தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்புகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 7 லட்சம் ரூபாய்மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செ#யப்பட்டது. இவ்வாறு புறநகர் கமிஷனர் ராஜேஷ்தாஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ