சென்னை : ரங்கராஜபுரத்தில், கோடம்பாக்கம் ரயில் நிலையத்தையும், பசுல்லா சாலையையும் இணைக்கும் மேம்பாலத்தை, முதல்வர் ஜெயலலிதா, போக்குவரத்திற்கு திறந்து வைத்ததை தொடர்ந்து, பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ரங்கராஜபுரத்தில், கோடம்பாக்கம் ரயில் நிலையத்தையும், பசுல்லா சாலையையும், ரங்கராஜபுரத்தையும், பசுல்லா சாலையையும் இணைப்பதற்கு, இரு வழிகள் கொண்ட ரங்கராஜபுரம் பாலத்தை, தெற்கு ரயில்வேயுடன் இணைந்து, சென்னை மாநகராட்சி கட்டியுள்ளது. இதில், 24 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, கோடம்பாக்கம் ரயில் நிலையத்தையும், பசுல்லா சாலையையும் இணைக்கும் பாலத்தின் பணிகள், முடிந்து, திறப்பு விழாவுக்காக காத்திருந்தது.இந்த பாலத்திற்கான போக்குவரத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா கண்ணொளி காட்சி மூலம், நேற்று திறந்து வைத்தார். ரங்கராஜபுரத்தையும், பசுல்லா சாலையையும் இணைக்கும் மற்றொரு வழிப்பாலத்தின் பணிகள், 27 கோடி ரூபாய் மதிப்பில், நடந்து வருகிறது. பாலத்தின் ஒரு வழியை திறந்து வைத்துள்ளது, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து, தனியார் துறையில் வேலை பார்க்கும் பூங்குழலி கூறும் போது, 'இரு சக்கர வாகனத்தில், அலுவலகத்திற்கு சென்று வருகிறோம். கடும் போக்குவரத்து நெரிசலை கடந்து செல்வது பெரும் பாடாக உள்ளது. இந்நிலையில், ரங்கராஜபுரம், பாலத்தின் ஒரு வழிப்பாதை திறக்கப்பட்டுள்ளது, பேருதவியாக உள்ளது. தி.நகர் பகுதிக்கு மிக எளிதாக இப்பாலத்தில் சென்று விடலாம்' என்றார்