| ADDED : பிப் 14, 2024 12:39 AM
சென்னை, சென்னை பெருநகர் பகுதியில் நில வகைப்பாடு திட்டமிடலுக்கு ஒருங்கிணைந்த புதிய வழிமுறை உருவாக்கப்பட உள்ளது. சென்னை பெருநகர் பகுதி, 1,189 சதுர கி.மீ., பரப்பளவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதில், சர்வே எண் வாரியாக நில வகைப்பாடு விபரங்கள், இரண்டாவது முழுமை திட்டத்தில் தொகுக்கப்பட்டன.ஆனால், இந்த விபரங்களில் காணப்படும் பிழைகளால் பொது மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். தவறான வகைப்பாட்டை மாற்றுவதற்கு, பொது மக்கள் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், மூன்றாவது முழுமை திட்ட தயாரிப்பு பணிகளை, சி.எம்.டி.ஏ., எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துவக்கி உள்ளது. இதில், நில வகைப்பாடு தொடர்பான விஷயங்களை நவீன தொழில்நுட்ப ரீதியாக அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறையை பரிந்துரைக்க தனியார் கலந்தாலோசகர் மற்றும் வல்லுனர்களை ஒப்பந்த முறையில் தேர்வு செய்யும் பணிகள் துவங்கி உள்ளது. நில வகைப்பாடு விபரங்களில் இதுவரை காணப்பட்ட குறைபாடுகளை தவிர்த்து முற்றிலும் அறிவியல் பூர்வமானதாக புதிய வழிமுறைகள் அமைந்து இருக்கும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.