சென்னையில் பெய்த பருவமழையில், 2022 டிச., மாதத்தை ஒப்பிடும்போது, 2023 டிசம்பரில் திரு.வி.க., நகர் மண்டலத்தில், நிலத்தடி நீர்மட்டம் 13 அடி உயர்ந்துள்ளது. ராயபுரம், மணலி, தண்டையார்பேட்டை, மாதவரம் மண்டலங்களில், 4 முதல் 8 அடி வரை உயர்ந்துள்ளது. ஆனால், நீர்நிலைகள் அதிகமுள்ள தென்சென்னை மண்டலங்களில், 1 முதல் 3 அடி வரை மட்டுமே நீர்மட்டம் உயர்ந்துள்ளது.சென்னை மாநகராட்சியில் தினமும், 85 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, 100 கோடி லிட்டர்குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.விரிவாக்க பகுதிகளில் குடிநீர் திட்டம் முழு வீச்சு அடையாததால், நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுகிறது. இதனால், லாரி குடிநீர் பயன்பாடும் அதிகரித்துள்ளது.நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, மழைநீர் சேகரிப்பில் தொலைநோக்கு பார்வையின்மை போன்ற காரணத்தால், நிலத்தடி நீர் போதிய அளவு பூமிக்குள் தங்குவதில்லை.விரிவாக்கத்திற்கு முந்தைய சென்னை மாநகராட்சியில் ஏரி, குளங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தன. 2011ம் ஆண்டுக்குப் பின் ஏரி, குளங்கள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வந்தன.இதில், 210 நீர்நிலைகள், 2020ல் மேம்படுத்தப்பட்டதுடன், 2,450 உறை கிணறுகளும் அமைக்கப்பட்டன. இதனால், சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் மட்டம் ஓரளவு உயர்ந்தது.சென்னை மாநகராட்சியில் நிலத்தடி நீரை கணக்கிட, 200 வார்டுகளிலும் நிலத்தடி நீர் அளவுமானிகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும், நிலத்தடி நீர் மட்டம் கணக்கிடப்படுகிறது.கடந்த 2022 அக்டோபரில் துவங்கிய வடகிழக்கு பருவமழை, டிச., 13ம் தேதி நிறைவு பெற்றது. ஆண்டு சராசரி அளவில், 2021ஐ விட, 2022ல், 25 சதவீதம் மழை பொழிவு குறைவாக இருந்தது.கடந்த 2023ம் ஆண்டு, வெயில் காலமான ஜூன் மாதம் முதல், அவ்வப்போது மழை பெய்தது. இந்த வகையில் 2022ல் தென்மேற்கு பருவமழை, 44 செ.மீ.,யும், 2023ல் 78 செ.மீ.,யும் பெய்துள்ளது.அதேபோல் வடகிழக்கு பருவமழை, 2022ல் 92 செ.மீ.,யும், 2023ல் 18 சதவீதம் கூடுதலாக, 109 செ.மீ., மழையும் பெய்துள்ளது.சமீபத்தில், 'மிக்ஜாம்' புயலால், சென்னையில் பரவலாக கனமழை பெய்தது. இதில் இரண்டு, மூன்று நாட்கள் வரை வெள்ளம் தேங்கி நின்று வடிந்ததால், நவம்பர் மாதத்தைவிட, டிசம்பர் மாதம் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது.மேலும், 2022 டிசம்பரை விட, 2023 டிச., மாதத்தில், 13 அடி வரை உயர்ந்துள்ளது. ஆனால், நீர்நிலைகள் அதிகமுள்ள தென்சென்னையில், நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயரவில்லை.இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:மண்ணின் தன்மை, மழைநீர் சேகரிப்பை பொறுத்து, 2022 டிச., மாதத்தை விட, 2023 டிச., மாதத்தில், ஐந்து மண்டலங்களில், 4 முதல் 13 அடி வரை நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது.நீர்நிலைகள் அதிகமுள்ள தென் சென்னை மண்டலங்களில், நிலத்தடி நீர் எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை. இதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
2022, 2023 ஆகிய ஆண்டுகளில் டிச., மாதத்தில் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் (அடியில்)
மண்டலம் 2022 டிச., 2023 டிச.,திருவொற்றியூர் 10.46 8.66மணலி 11.68 7.71மாதவரம் 18.66 12.04தண்டையார்பேட்டை 13.15 6.66ராயபுரம் 21.35 13.71திரு.வி.க.நகர் 24.57 11.74அம்பத்துார் 12.53 11.25அண்ணா நகர் 10.13 9.02தேனாம்பேட்டை 15.02 13.84கோடம்பாக்கம் 15.88 13.58வளசரவாக்கம் 5.11 5.54ஆலந்துார் 11.08 8.39அடையாறு 6.16 5.90பெருங்குடி 8.39 7.48சோழிங்கநல்லுார் 9.58 8.59
2022 டிச., முதல் 2023 டிச., வரை 15 மண்டலத்திலும் சேர்த்து, மொத்த நிலத்தடி நீர் அளவு (அடியில்)
டிசம்பர் 12.89ஜனவரி 13.06பிப்ரவரி 14.40மார்ச் 14.53ஏப்ரல் 16.37மே 17.55ஜூன் 16.47ஜூலை 17.97ஆக., 15.94செப்., 14.43அக்., 15.51நவ., 10.66டிச., 9.58
3 அடி உயர்ந்த நீர்மட்டம்
கடந்த 2022 டிச., மாதத்தைவிட, 2023 டிச., மாதத்தில், திரு.வி.க., நகர் மண்டலத்தில் 13 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதேபோல் ராயபுரத்தில் 8 அடி, தண்டையார்பேட்டையில் 7 அடி, மாதவரத்தில் 6 அடி, மணலியில் 4 அடி வரை உயர்ந்துள்ளது. மீதமுள்ள மண்டலங்களில் 1 முதல் 3 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வளசரவாக்கம் மண்டலத்தில் வித்தியாசம் தெரியவில்லை.அதேபோல், மொத்த மண்டலங்களை ஒப்பிடும் போது, 2022 டிச., மாதத்தை விட, 2023 டிச., மாதத்தில் 3 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.- -நமது நிருபர் --