நடைமுறைக்கு வராத பாஸ்ட் ட்ராக் இமிகிரேஷன் அதிருப்தி! சென்னை ஏர்போர்ட்டில் பயணியருக்கு அவஸ்தை
சென்னை, :சென்னை விமான நிலையத்தில், 'பாஸ்ட் ட்ராக் இமிகிரேஷன்' எனும் விரைவான குடியேற்ற சேவை திட்ட பணிகள் முடிந்தும் நடைமுறைக்கு வராததால், பயணியர் நீண்ட நேரம் காத்திருக்க முடியாமல், மிகவும் சிரமப்படுகின்றனர்.நம்நாட்டில் இருந்து வெளிநாடு செல்லும் பயணியர், அங்கிருந்து இந்தியாவிற்கு வருவோர், 'இமிகிரேஷன்' எனும் குடியேற்றம் தொடர்பான நடைமுறையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.இதில், பயணி எங்கிருந்து வருகிறார் என்பதும், அவரின் வருகை குறித்த விபரங்களும் பதிவு செய்யப்படும். இந்த நடைமுறை, உலகில் எங்கு சென்றாலும் பொருந்தும்.இப்படி, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோரின் குடியேற்ற சேவைக்காக, நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் பயணியர் பலருக்கு, குறித்த நேரத்தில் வெளியேற முடியாமல் விமான நிலையத்தில் காத்திருக்க நேரிடுகிறது. இதனால், அவர்களின் திட்டமிட்ட பயணத்தை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. .இவற்றை கருத்தில் கொண்டு, மத்திய அரசு 'பாஸ்ட் ட்ராக் இமிகிரேஷன் - டிரஸ்டட் டிராவலர் புரோக்ராம்' எனும், நம்பகமான பயணியருக்கான விரைவான குடியேற்ற சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.நாட்டிலேயே முதல் முறையாக, கடந்த ஜூனில் டில்லி விமான நிலையத்தில் துவங்கப்பட்ட இந்த திட்டம், படிப்படியாக சென்னை, மும்பை, கோல்கட்டா உட்பட முக்கிய ஏழு விமான நிலையங்களிலும் அதைத் தொடர்ந்து அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் விரிவாக்கம் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது. பதிவு செய்வது எப்படி
'பாஸ்ட் ட்ராக் இமிகிரேஷன்' திட்டத்தை பயன்படுத்த, பயணியர், www.ftittp.mha.gov.inஎன்ற இணையதளத்திற்கு சென்று இ - மெயில் மற்றும் மொபைல் போன் எண் விபரத்தை பதிவிட வேண்டும்.தங்களின் புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட் விபரத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். கைரேகை, முகப்படம் உள்ளிட்ட விபரங்களையும் இணைப்பது முக்கியம். கேட்கப்பட்ட விபரங்களை பதிவு செய்தவுடன், அதற்குரிய அடையாள எண், குறுஞ்செய்தி வாயிலாக மொபைல் போன் எண்ணிற்கு அனுப்பப்படும். இந்த குறுந்தகவல், அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, நேர்காணலுக்கு அழைப்பர். போலி விபரங்கள், புகைப்பட மாற்றம், இருப்பிட விபரங்களில் மாற்றம் கண்டறியப்பட்டால், பதிவு செய்வது ரத்து செய்யப்படும்.இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, பயணியர் அதிகம் வந்து செல்லும் சென்னை விமான நிலையத்தில் இதற்கான பணிகள், சில மாதங்களாக நடந்தது. சர்வதேச வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளில், புதிய கவுன்டர்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்தும், நடைமுறைக்கு வராமல் இருப்பதால், பயணியர் பெரியளவில் அவதிக்குள்ளாகின்றனர். ஒரு மணி நேரம்
பயணியர் சிலர் கூறியதாவது:துபாய், சிங்கப்பூர், அபுதாபி, சார்ஜா, மலே�யா உட்பட பல நாடுகளில் இருந்து நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணியர், சென்னை விமான நிலையத்திற்கு வருகின்றனர்.'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் குடியுரிமை, சுங்க சோதனை முடிப்பது சவாலாக உள்ளது. நீண்ட வரிசையில் காத்திருந்து வெளியேற, 40 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் ஆகிறது.ஏற்கனவே, விமானத்தில் பயணம் செய்த களைப்பில் வருகிறோம். கூடுதலாக இமிகிரேஷனுக்காக காத்திருந்து வெளியேறுவது, அதிருப்தியை ஏற்படுத்துகிறது. விரைவு குடியேற்ற சேவை திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:விமான நிலையத்தில், பயணியர் குடியேற்ற சேவைகளை முடிப்பதற்கு, தனி கவுன்டர்கள் உள்ளன. இருப்பினும், ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நின்று முடிப்பதற்கு, கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறது.விரைவான குடியேற்ற சேவைக்காக, விமான நிலையத்தில் சர்வதேச வருகை, புறப்பாடு முனையங்களில், தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நான்கு புதிய கவுன்டர்கள் அமைத்து தந்துள்ளோம். எங்கள் சார்பில் செய்துதரக்கூடிய பணிகள் முழுதும் முடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.குடியுரிமை பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'சென்னை விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவைக்கான ஒப்புதல் வாங்கும் பணிக்காக, குடியுரிமை பணியகத்தின் தலைமையகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அவர்கள் உறுதி செய்த பின் தான் செயல்படுத்தப்படும்' என்றனர்.
'டிஜி யாத்ரா' செயலியால் 3.40 லட்சம் பேர் பயன்
பயணியர், அனைத்து சோதனைகளையும் முடித்து, விமானத்தில் விரைவில் ஏற 'டிஜி யாத்ரா' என்ற திட்டம், 2022ம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது.இதில் செயலி வாயிலாக ஆதார், பாஸ்போர்ட் எண், பயண டிக்கெட் உள்ளிட்ட விபரங்களை பதிவேற்றி, எளிதில் பயணம் செய்யலாம். வரிசையிலும் நிற்கவேண்டிய அவசியமில்லை.செயலி வாயிலாக நம் முக அடையாளத்தை காண்பித்து, விமான நிலையத்திற்கு செல்லலாம். சென்னையில் இந்த திட்டம், கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வரை இதன் வாயிலாக 3.4 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
'ஸ்லீப்பிங் பாட்ஸ்' தேவை
விமான நிலையங்களுக்கு வரும் பயணியர் ஓய்வெடுக்கும் வகையில், புறப்பாடு மற்றும் வருகை பகுதியில் 'லாஞ்ச்' வசதி உள்ளது. இதில், பணம் செலுத்தி உணவு, குடிநீர் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற இடங்களில் இருந்து 'ட்ரான்சிட்' பயணியராக வருவோர், விமானத்திற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். அதற்காக, விமான நிலையங்களில் 'ஸ்லீப்பிங் பாட்ஸ்' எனும், தனி ஓய்வறை வசதி, அனைத்து விமான நிலையங்களிலும் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டது. சென்னை விமான நிலையத்திலும், 2022ம் ஆண்டு உள்நாட்டு வருகை பகுதியில் நான்கு தனி ஓய்வறை அமைக்கப்பட்டது. இவை பயணியரிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சேவைகள் தற்காலிகமாக கொண்டு வரப்பட்டதால், பல விமான நிலையங்களில் இச்சேவை, தற்போது செயல்பாட்டில் இல்லை. எனவே 'ஸ்லீப்பிங் பாட்ஸ்' சேவையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என, சமூக வலைதளங்களில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விமானங்கள் ரத்து
சென்னையில் இருந்து மாலை 6:10 மணி குவஹாத்தி விமானம், இரவு 10:00 மணி கோல்கட்டா விமானம், கோல்கட்டாவில் இருந்து இரவு 10:00 மணிக்கு சென்னை வரும் விமானம், பெங்களூரில் இருந்து மாலை 5:30 மணிக்கு வரும் விமானங்கள், நேற்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது.எந்த முன் அறிவிப்புமின்றி, விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணியர் அவதி அடைந்தனர்.