அம்பத்துார்: தனியார் மயமாக்கலுக்கு எதிராக நடந்து வரும் பெண் துாய்மை பணியாளர்களின் உண்ணாவிரத போராட்டத்தில், ஆறாவது பெண் துாய்மை பணியாளர் உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குப்பை அகற்றும் பணியை தனியார் நிறுவனத்திடம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, துாய்மை பணியாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அம்பத்துார், கல்யாணபுரத்தில் உள்ள உழைப்போர் உரிமை இயக்க அலுவலகத்தில், ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களைச் சேர்ந்த, நான்கு பெண் துாய்மை பணியாளர்கள், கடந்த மாதம் 17ம் தேதி, உண்ணா விரத போராட்டத்தை துவங்கினர். நால்வரும் உடல்நலக்குறைவால், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதை யடுத்து, அதே மண்டலங்களைச் சேர்ந்த வேறு நான்கு பெண் துாய்மை பணியாளர்கள் இரண்டாம் கட்டமாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். இதில், சரஸ்வதி, 39, என்ற துாய்மை பணியாளர், கடந்த 7ம் தேதி உடல்நல குறைவு ஏற்பட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ராயபுரம் மண்டலத்தைச் சேர்ந்த பெண் துாய்மை பணியாளர் சரஸ்வதி, 40, நேற்று உடல்நல குறைவால் மயங்கினார். அவரை, உடன் இருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மற்ற இரண்டு பெண் துாய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.