படப்பை: சென்னை புறகரில் படப்பை, மாடம்பாக்கம், ஆதனுார், ஒரத்துார், காவனுார், கரசங்கால், வரதராஜபுரம், மணிமங்கலம் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர். நாளுக்கு நாள் அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த பகுதிகளில், கடந்த ஓராண்டாக வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதனால், வீட்டை பூட்டி வேலைக்கு செல் வோர் மற்றும் வெளியூர் செல்லும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர், படப்பை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் அதிக அளாவில் வசிக்கின்றனர். அண்மை காலமாக, பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருடும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. போலீசாரின் அழுத்தத்தால், பாதிக்கப்பட்டவர்கள் திருட்டு சம்பவம் குறித்து வெளியே சொல்வதில்லை. இதனால், ஒரு சில சம்பவங்கள் மட்டும் வெளியே தெரிகின்றன. பல திருட்டு சம்பவங்கள் மறைக்கப்படுகின்றன. திருட்டில் ஈடுபடும் நபர்களை, போலீசார் இதுவரை பிடிக்கவில்லை. இதனால், வீட்டை விட்டு வெளியே செல்லவே அச்சமாக உள்ளது. போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை சீரமைத்து, திருட்டில் ஈடுபடும் நபர்களை விரைந்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். போலீஸ் பற்றாக்குறை மணிமங்கலம் காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து, படப்பையில் புதிய காவல் நிலையம், செப்., 20ம் தேதி திறக்கப்பட்டது. இங்கு இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படவில்லை. மணிமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், கூடுதலாக கவனிக்கின்றனர். போலீசார் பற்றாக்குறை உள்ளதால், படப்பையில் புதிய காவல் நிலையம் அமைத்தும் பயனின்றி உள்ளது. அண்மையில் நடந்த சில திருட்டு சம்பவங்கள் நவ., 4: படப்பை அருகே ஒரத்துார், நீலமங்கலம் பகுதியில், அடகு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள், லாக்கரை உடைக்க முடியாததால் தப்பி சென்றனர். இதனால், லாக்கரில் இருந்த 100 சவரன் நகை தப்பியது. அக்., 31: படப்பையில், அரசு பேருந்தில் பயணித்த கர்ப்பிணியின் கவனத்தை திசை திருப்பி, 18.5 சவரன் தங்க நகையை, மர்ம நபர் திருடி சென்றார். அக்., 12: படப்பை அருகே, புஷ்பகிரியில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டை உடைத்து, 7 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.