சென்னை: 'பொது இடங்களுக்கு அழைத்து செல்லப்படும் நாய்களுக்கு, வாய்ப்பூட்டு கட்டாயம் இல்லை; அதேநேரம், கழுத்தில் கயிறு இல்லாமல் வெளியில் அழைத்து செல்லக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பை தொடர்ந்து, வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதை, சென்னை மாநகராட்சி கட்டாயமாக்கி உள்ளது. பொது இடங்களுக்கு நாய்களை அழைத்து செல்லும்போது, அவற்றுக்கு வாய்ப்பூட்டு போட வேண்டும்; கழுத்து கயிறு இல்லாமல் வெளியில் அழைத்து செல்லக்கூடாது. செல்லப்பிராணிகளை பதிவு செய்யாவிட்டால், 5,000 ரூபாய்; வாய்ப்பூட்டு போடாவிட்டால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவில், 'ஒருவருக்கு நான்கு நாய்களுக்கான உரிமம் மட்டும் வழங்கப்படும் என்ற விதிமுறையில் இருந்து, கைவிடப்பட்ட, காயமடைந்த நாய்களை காப்பாற்றி பராமரிக்கும் அமைப்புகளுக்கு விலக்களிக்க வேண்டும். அபராதம் விதிப்பதால், கைவிடப்படும் நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி தரப்பில், 'பொது இடங்களுக்கு அழைத்து செல்லப்படும் நாய்களுக்கு வாய் கவசம் கட்டாயமில்லை. கழுத்தில் கயிறு கட்டாமல் அழைத்து செல்லக்கூடாது என்பது கட்டாயம்' என, தெரிவிக்கப்பட்டது. 'இதுவரை, 82,000 செல்லப் பிராணிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவற்றுக்கு ஒரு முறை, 'மைக்ரோ சிப்' பொருத்தினால் போதும். செல்லப் பிராணிகள் பதிவுக்கான காலக்கெடு, டிச., 7 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது' என, தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், 'ஒருவர் நான்கு பிராணிகளை பதிய மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது' என, புகார் தெரிவிக்கப்பட்டது. 'அந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு விட்டது. நான்கு பிராணிகளுக்கு மேல் பதிவு செய்ய, எந்த தடையும் இல்லை' என, மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். மேலும், நீதிமன்றத்தில் தெரிவித்த இந்த விளக்கத்தை, ஒரு வாரத்தில் அறிவிப்பாணையாக மாநகராட்சி வெளியிட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.