சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியானது தொடர்பாக, த.வெ.க., முன்னணி நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மாவட்ட செயலர் மதியழகன் ஆகியோரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கரூர் சம்பவம் குறித்து, குஜராத் ஐ.பி.எஸ்., அதிகாரி பிரவீன்குமார், ஏ.எஸ்.பி., முகேஷ்குமார் உள்ளிட்ட, 12 சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவர்களின் விசாரணையை, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டி.ஜி.பி.,க்கள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் மேற்பார்வையிட்டு வருகின்றனர். இதற்கிடையே, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, த.வெ.க., முன்னணி நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலர் மதியழகன் உள்ளிட்டோருக்கு, 'சம்மன்' அனுப்பி இருந்தனர். இதையடுத்து, ஆனந்த் உள்ளிட்ட நால்வரும், கரூரில் சி.பி.ஐ., அதிகாரிகள் முன் நேற்று ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடந்தது.