சென்னை, ''தன்னை முழுமையாக அறிந்து, ராமனையும் அறிந்தவராக சீதை வாழ்ந்தார்,'' என, 'சீதாயன்' நுாலின் ஆசிரியர் டீனா மரியம் பேசினார்.விஜில் புரபெஷனல்ஸ் மண்டலியின் சார்பில், 'முன்ஜென்ம அனுபவங்களின் பரவசம்' என்ற தலைப்பில், 'சீதாயன் - தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் சீதா' எனும் நுாலின் ஆசிரியர் டீனா மரியம், நேற்று சென்னையில் பேசினார்.அவர் பேசியதாவது:நான் அமெரிக்காவில் பிறந்த யூத இனப்பெண். தியானத்தில் ஈடுபட்டிருந்த போது, முன்ஜென்ம அனுபவங்களுக்குள் செல்ல முடிந்தது. பல நுாற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவில் சீதையின் தோழியாக நான் வாழ்ந்த நினைவுகள் வந்தன. அவற்றை நான் நம்ப முடியாமல் சிரமப்பட்டேன்.பின், ராமாயணத்தை பலமுறை வாசித்தேன். ராமாயணம் நடந்த இடங்களுக்கும் சென்றேன்.சீதை மிகவும் சிரமப்பட்டவராக பலரும் கூறுகின்றனர். ஆனால், ராமாயணத்தில் ராமனைப்பற்றி சொன்ன அளவுக்கு சீதையைப்பற்றி சொல்லவில்லை. சீதை, தன்னை அறிந்தவராகவும், ராமனைப்பற்றி அறிந்தவராகவும் இருந்தார். ராமன் உடன்பட்ட அனைத்து முடிவுகளிலும் சீதையும் நன்கு உணர்ந்தே இருந்தார். ராமனுடன் காட்டுக்கு சென்ற போது, தவ வாழ்க்கையை அனுபவிப்பதே தன் கடமை என்பதை முழு மனதுடன் ஏற்றிருந்தார். ராமனின் கடைசி கால முடிவுகளிலும் சீதை உடன்பட்டிருந்தார். இப்படி பல நிலைகளை நான் உணர்ந்தேன்.காஸ்டாரிகா எனும் இடத்தில் ராமருக்கு ஒரு யூதர் கோவில் கட்ட உள்ளதாக அறிந்து, அவரிடம் விசாரித்தேன். அவர் வயலில் உழுதபோது, ஒரு சிலை கிடைத்ததாகவும், அவர் ராமர் என அறிந்ததாகவும், அவரின் கதையை கேட்டபின், கோவில் கட்டுவதாகவும் கூறினார். இப்படி, ராமன், சீதை குறித்து பல்வேறு சம்பவங்களை, உலகம் முழுக்க நான் சந்திக்கிறேன். அவற்றை, நுாலாக பதிவு செய்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.