சென்னை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இயற்கை எரிவாயு பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல், நிலக்கரி, எல்.பி.ஜி., எரிவாயுக்கு மாற்றாக பயன்படுத்துவதால், அதற்கு ஏற்ப வாகனங்கள் வடிவமைப்பும் மாற்றப்படுகின்றன.தமிழகத்தில், 2.20 கோடி வீடுகளுக்கு, குழாய் வாயிலாக இயற்கை எரிவாயு வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சென்னை, ஓ.எம்.ஆர்., மாநகராட்சி எல்லையில், 196, 198, 199 மற்றும் 200வது வார்டுகளில், குழாய் வழியாக வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கப்பட உள்ளது.எரிவாயு கொண்டு செல்ல, 25 கோடி ரூபாயில், 92 கி.மீ., துாரம் குழாய் பதிக்கப்படுகிறது. தற்போது, பிரதான சாலைகளில், 6 கி.மீ., குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள தெருக்களில், படிப்படியாக பதிக்கப்பட உள்ளது.செம்மஞ்சேரியில், எரிவாயு மையம் திறக்கப்பட்டு உள்ளது. இதில், கன்டய்னரில் திரவமாக எடுத்து வந்து, இந்த மையத்தில் வைத்து, இயற்கை எரிவாயுவாக மாற்றப்படும். பின், குழாய் வழியாக வீடுகளுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.இதுகுறித்து, எ.ஜி.பி., சி.ஜி.டி., நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:ஸ்ரீபெரும்புதுார், படூர் உள்ளிட்ட பகுதியில், 500 வீடுகளுக்கு இணைப்பு வழங்கி உள்ளோம். ஓ.எம்.ஆர்., மாநகராட்சி எல்லையில், ஒக்கியம் துரைப்பாக்கத்தில், 14,000 வீடுகள்.சோழிங்கநல்லுார், காரப்பாக்கத்தில் 8,000 மற்றும் செம்மஞ்சேரியில் 12,000 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட உள்ளது.செம்மஞ்சேரியில் இயற்கை எரிவாயு மையம் திறந்ததால், குழாய் பதித்த பகுதியில் படிப்படியாக இணைப்பு வழங்கப்படும். இத்திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால், எல்.பி.ஜி., எரிவாயுவை விட, 30 சதவீதம் குறைந்த விலையில் கிடைக்கும். இரண்டு ஆண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.