| ADDED : ஜன 12, 2024 01:02 AM
சென்னை, தமிழக குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, பல்வேறு மாவட்டங்களில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இப்பணிகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள் பயன்பாட்டிற்காக, கடந்த மாதம் மகேந்திரா நிறுவனத்தின் புதிய பொலிரோ வாகனங்கள் வழங்கப்பட்டன. இதற்காக, ஒவ்வொரு வாகனத்திற்கும், 11 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அரசு வழங்கிய புதிய வாகனங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. பதிவெண் இல்லாததால், வாகனங்களை இயக்க முடியவில்லை. சேப்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள, குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில், நான்கு வாகனங்கள் நாள் கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. புதிய வாகனங்கள் இருந்தும், மழை பாதித்த மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, ஓட்டை, உடைசல் வாகனங்களில் அதிகாரிகள் சென்று வருகின்றனர்.இதுகுறித்து கேட்டபோது, 'புதிய ஆண்டில் பதிவு செய்வதற்காக தாமதமானது. இன்று வாகனங்கள் பதிவு செய்யப்படவுள்ளன' என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.