உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பார்க்கிங்கில் ஒப்பந்த நிறுவனம்...அடாவடி!நிர்ணயித்ததைவிட கூடுதலாக வசூல்

பார்க்கிங்கில் ஒப்பந்த நிறுவனம்...அடாவடி!நிர்ணயித்ததைவிட கூடுதலாக வசூல்

சென்னையில் சாலையோர வாகன நிறுத்தங்களில், இருசக்கர வாகனங்களுக்கு ஐந்து ரூபாய்க்கு பதில் கூடுதலாக, 20 ரூபாய் என, அடாவடி வசூலில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து புகார் வருவதால், தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட உள்ளது என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்துக்கும் அதிகமான குடியிருப்புகளில் 1.25 கோடி பேர் வசிக்கின்றனர். ஒரு குடும்பத்தில் சராசரியாக, ஒன்று முதல் அதிகபட்சம் மூன்றுக்கு மேல் இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் உள்ளன. சமீபகாலமாக, நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.பெரும்பாலான வீடுகளில், வாகன நிறுத்த வசதி இல்லாததால், சென்னை மாநகராட்சியின் பேருந்து தட சாலையோரங்களில், வாகனங்கள் நிறுத்தும் திட்டத்தை மாநகராட்சி துவக்கியது. அதற்கென கட்டணம் வசூலிக்க, தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், தி.நகர், பாண்டி பஜார், அண்ணா நகர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட முக்கிய சந்தை பகுதிகள் அடங்கிய பிரதான சாலைகளில், மாநகராட்சியின் சாலையோர வாகன நிறுத்தங்கள் உள்ளன.இவற்றுடன், மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையோர சாலைகளிலும், வாகன நிறுத்தங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வாகன நிறுத்தங்களில், இருசக்கர வாகனங்களுக்கு, ஒரு மணி நேரத்திற்கு ஐந்து ரூபாய்; நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய் என, மாநகராட்சி கட்டணம் நிர்ணயித்தது.இவற்றில், பாண்டி பஜார் பகுதியில் பல அடுக்கு வாகன நிறுத்த வசதி ஏற்பட்டது. ஆனால், பலர் அங்கு வாகனங்கள் நிறுத்தாமல், சாலையோர வாகன நிறுத்தங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.இதனால், அப்பகுதியில் சிறப்பு கட்டணமாக இருசக்கர வாகனங்களுக்கு 15 ரூபாய்; நான்கு சக்கர வாகனங்களுக்கு 60 ரூபாய் என, ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில், தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர், நிர்ணயிக்கப்பட்ட வாகன நிறுத்த கட்டண தொகையைவிட, கூடுதலாக வசூலித்து வருகின்றனர்.பல்வேறு இடங்களில், கட்டண விபரம் அடங்கிய பலகைகளில், இருசக்கர வாகனத்திற்கான கட்டண விபரத்தை மறைத்து, அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் தலா 20 ரூபாய் வசூலித்து வருகின்றனர். அதன்படி, 15 ரூபாய் கூடுதலாக வசூலிக்கின்றனர். அத்துடன், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ரசீதும் தரப்படுவதில்லை.அதேபோல், முக்கிய கடற்கரை, வணிக சந்தை பகுதிகளில் நிறுத்தப்படும் நான்கு சக்கர வாகனங்களுக்கு, 60 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.இந்த அடாவடி வசூல் குறித்து, மாநகராட்சியின் '1913' என்ற எண்ணில் புகார் அளித்தாலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என, வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டுகின்றனர்.இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:மாநகராட்சியின் வாகன நிறுத்தங்களில், ஐந்து ரூபாய்க்கு பதில், 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.இது குறித்து, கட்டண வசூலில் ஈடுபடும் ஊழியர்களிடம் கேட்டால், 'இங்கு அனைத்தும் நான்கு சக்கர வாகன நிறுத்தம். அதற்கேற்ப தான் கட்டணம் வசூலிக்கப்படும்' என்கின்றனர்.நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடம், 50 ரூபாய்க்கு மேல் வசூலிக்கின்றனர். காரணம் கேட்டால், 'நீங்கள் திரும்பி வரும் வரை இங்கேயே காத்திருக்க முடியாது; நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாகனங்களை எடுத்து செல்லலாம்' என்கின்றனர்.வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும், அவர்கள் முறையாக ஈடுபடுவது கிடையாது. இதனால், வாகனங்கள் எடுக்கும்போது, மற்ற வாகனங்கள் மீது எதிர்பாராமல் மோதி, அவற்றின் உரிமையாளர்களுடன் வீண் தகராறு ஏற்படுகிறது.அதேபோல், கடற்கரை பகுதிகளில், குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாகனங்கள் நிரம்பினால், மாற்று இடங்களுக்கு திருப்பிவிட வேண்டும். அவ்வாறு செய்யாமல் நுழைவு பகுதிகளில் அதிக கட்டணத்தை வசூலித்த பின்னரே அனுமதிக்கின்றனர்.சில நேரங்களில், வாகனங்கள் நிறுத்த இடம் இல்லையென்றால் கட்டணத்தை திருப்பித் தர மறுக்கின்றனர். இவ்வாறு அடாவடி வசூலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒப்பந்தம் ரத்து?

வாகன நிறுத்த ஒப்பந்ததாரர்கள் மீது தொடர்ந்து புகார் வருகிறது. ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தம் ரத்து செய்து, புதிதாக விட மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், தொடர்ந்து ஒப்பந்ததாரரின் பணியாளர்கள் அடாவடி வசூலில் ஈடுபட்டு வந்தால், ஒப்பந்த நிறுவனம் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.- ஜெ.ராதாகிருஷ்ணன்,கமிஷனர், சென்னை மாநகராட்சி.மெரினா கடற்கரைக்கு பைக்கில் வந்தேன். வாகன நிறுத்த கட்டணமாக மணிக்கு 40 ரூபாய் என, ஊழியர் கூறினார். 5 ரூபாய் தானே என்றதற்கு, 'இஷ்டம் இருந்தால் நிறுத்துங்கள், இல்லையென்றால் வண்டியை எடுத்து கிளம்புங்கள்' என அடாவடி செய்தனர். வேறு வழியின்றி எழிலகம் அருகில் பைக் நிறுத்தி, கடற்கரைக்கு சென்றேன்.- நரேந்திரன், 30,திருவல்லிக்கேணி.

வசூலில் கொழிக்கும் மெரினா 'பார்க்கிங்'

மெரினா கடற்கரையில் பொழுதுபோக்க, குடும்பத்துடன் பலரும் வருகின்றனர். அவ்வாறு வருவோரின் வாகனங்கள் நிறுத்த, மாநகராட்சியின் ஒப்பந்த வாகன நிறுத்தம் உள்ளது. இங்கு வார நாட்களில் சராசரியாக 3,500 - 5,000 வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. வார இறுதி நாட்களில் இதன் எண்ணிக்கை இரு மடங்காக இருக்கும்.வாகனங்களை நிறுத்த, ஒப்பந்ததாரர் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், வாகன ஓட்டிகளை தரக்குறைவாக பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தவிர, வாகனங்களை நிறுத்தும்போது, அதன் உரிமையாளர்களுக்கு மொபைல் போனில் முறையாக குறுஞ்செய்தி அனுப்புவது இல்லை எனவும் புகார் எழுந்துள்ளது.மெரினா கடற்கரையில் உள்ள வாகன நிறுத்தும் பகுதிக்கு வரும் கார்களுக்கு ஏற்றபடி 40 முதல் 60 ரூபாய் வரை, ஊழியர்கள் கட்டணம் வசூலிக்கின்றனர். சிலரிடம் 50 ரூபாய் வாங்கி, ரசீது தராமல் மூன்று மணி நேரம்கூட வாகனங்களை நிறுத்த அனுமதிக்கின்றனர். இவ்வாறான மோசடியில் ஈடுபடுவதால், ஒருநாளைக்கு 2,000 முதல் 5,000 ரூபாய் வரை, ஊழியர்கள் 'கல்லா' கட்டுவதாக, வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை