மாவட்ட கிரிக்கெட் போட்டியில் பைன் ஸ்டார் அணி கலக்கல்
சென்னை:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன், திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட லீக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.இதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பல்வேறு கிரிக்கெட் குழுவின் அணிகள் பங்கேற்றுள்ளன. மண்டலம் மற்றும் பகுதி வாரியாக அணிகள் பிரிக்கப்பட்டு, 50 ஓவர் அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன.ஆவடி, ஹிந்து கல்லுாரி மைதானத்தில், நேற்று முன்தினம் நடந்த போட்டியில், 'பி' மண்டலம், பிரிவு 1ல் இடம்பெற்றுள்ள அம்பத்துார் கிரிக்கெட் குழுவும், அதே பகுதியைச் சேர்ந்த பைன் ஸ்டார் கிரிக்கெட் சங்கம் அணியும், பலப்பரீட்சை நடத்தின.மழை துாறியதால் போட்டி 45 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் களமிறங்கிய பைன் ஸ்டார் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஹரிஷ், பந்துகளை தெறிக்கவிட்டு, ரன் வேட்டையில் ஈடுபட்டார்.இதனால், அந்த அணி 45 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு, 235 ரன்கள் எடுத்தது. அணியின் வீரர் ஹரிஷ் ஆட்டமிழக்காமல், 133 பந்துகளில், 15 பவுண்டரி, இரண்டு சிக்ஸர் உட்பட 149 ரன்கள் குவித்தார்.எட்டக்கூடிய இலக்குடன் அடுத்து களமிறங்கிய அம்பத்துார் அணிக்கு, பைன் ஆர்ட்ஸ் அணி பந்து வீச்சாளர்கள் அகிலேஷ், ஸ்ரீராம் கடும் நெருக்கடி தந்தனர். இதனால், அம்பத்துார் அணி 24.4 ஓவரில், 145 ரன்களில் 'ஆல் அவுட்' ஆனது.இதனால், பைன் ஆர்ட்ஸ் அணி 90 ரன் வித்தியாசத்தில் கலக்கல் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஸ்ரீராம், அகிலேஷ் முறையே தலா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.