சென்னை மாநகராட்சியின் 2023 - 24ம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, கூடுதலாக சொத்து வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 1,750 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. வரும் 2024 - 25ம் நிதியாண்டிற்கான சொத்து வரியை, வரும் 30 நாட்களுக்குள் செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற முடியும் என, மாநகராட்சி தெரிவித்து உள்ளது.சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில் சொத்து வரி, தொழில் வரி பிரதான வருவாயாக உள்ளது. ஒவ்வொரு நிதியாண்டும், 13 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்து உரிமையாளர்களிடமிருந்து, குறிப்பிட்ட தொகையை இலக்காக நிர்ணயித்து, மாநகராட்சி வசூலித்து வருகிறது. அதன்படி, கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், 1,700 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க, மாநகராட்சி இலக்கு நிர்ணயித்தது.நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரியை வசூலிக்க, மாநகராட்சி வருவாய் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 'நோட்டீஸ்'
குறிப்பாக, நீண்ட நாட்கள் சொத்து வரி செலுத்தாமல் இருந்த சென்னை துறைமுகம் உட்பட பல்வேறு பெரிய நிறுவனங்களுக்கும், 'நோட்டீஸ்' வழங்கி, சொத்து வரி வசூலிப்பில் தீவிரம் காட்டினர்.தொடர் நடவடிக்கையின் காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக, மாநகராட்சி சொத்து வரி வசூலித்து உள்ளது. அதன்படி, 1,750 கோடி ரூபாயை, வருவாய் துறையினர் வசூலித்து உள்ளனர். இதன் வாயிலாக, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, கூடுதலாக 50 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், வரும் 2024 - 25ம் நிதியாண்டுக்கான இலக்காக, 1,750 கோடி ரூபாயை மாநகராட்சி நிர்ணயித்து உள்ளது. ஒவ்வொரு நிதியாண்டின் அரையாண்டுக்கான சொத்து வரியை, முதல் 30 நாட்களுக்குள் செலுத்துவோருக்கு, மாநகராட்சி சார்பில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சம் 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.எனவே, ஏப்., 30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு, மாநகராட்சி சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் இருக்கும் அனைவரிடமும் வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வரும் நிதியாண்டில், 1,750 கோடி ரூபாய் இலக்கு என்றாலும், 1,800 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்படும்.இந்தாண்டு புதிதாக, ரயில்வே குடியிருப்புகள், அலுவலகங்களில் சொத்து வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1 சதவீத தனி வட்டி
அந்த வகையில், ஆண்டிற்கு 12 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்படும். மேலும், பல ஆண்டுகளாக வழக்கு காரணமாக நிலுவையில் உள்ள, 150 கோடி ரூபாய் சொத்து வரி நிலுவை தொகையும், இந்தாண்டு வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து, சட்டப்படி வசூலிக்கப்படும்.பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை, ஒவ்வொரு அரையாண்டின் முதல் 30 நாட்களில் செலுத்தி ஊக்கத்தொகை பெறலாம்.அதன் பின், 1 சதவீத தனி வட்டியுடன் செலுத்த வேண்டியிருக்கும். சொத்து உரிமையாளர்கள் செலுத்தும் வரி, மாநகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே, அனைவரும் முறைப்படி சொத்து வரி செலுத்த முன்வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -