| ADDED : ஜன 11, 2024 01:46 AM
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி மேம்பால ரயில் பாதையில், தினமும் 100க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த தடத்தில் தற்போதுள்ள 17 ரயில் நிலையங்களில் வேளச்சேரி, மயிலாப்பூர் போன்ற சில ரயில் நிலையங்களைத் தவிர, பெரும்பாலான ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லையென, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக, திருவான்மியூர் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தம் பகுதியில் கட்டடம் சேதமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால், உள்ளே நீர் புகுந்து, பல நாட்களாக வடியாமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.இது குறித்து, ரயில் பயணியர் சிலர் கூறியதாவது: சென்னை புறநகரில் மற்ற தடத்தில் இருக்கும் ரயில் நிலையங்களை போல், வேளச்சேரி தடத்தில் இருக்கும் ரயில் நிலையங்களில், போதிய அளவில் அடிப்படை வசதிகள் இல்லை. கூரைகள் சிதிலமடைந்து உள்ளன, மின்துாக்கி உள்ளிட்டவை அடிக்கடி பழுதாவது வாடிக்கையாக இருக்கிறது. திருவான்மியூர் மேம்பால ரயில் நிலையத்தில், வாகன நிறுத்தம் பகுதியில் கட்டடம் சேதமடைந்துள்ளது. வாகனங்களை நிறுத்திச் செல்வோருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல், மழைநீரை பல நாட்களாக அகற்றாமல் உள்ளனர். இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர். நீரில் வாகனங்கள் நிறுத்துவதால், அடிக்கடி பழுதாகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.