சேலையூர்,ராஜகீழ்ப்பாக்கம்- மாடம்பாக்கம் சாலை விரிவாக்க பணியில், போக்குவரத்து போலீசார்- நெடுஞ்சாலைத் துறையினரிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், இடையூறாக உள்ள சிக்னல் மற்றும் கேமரா கம்பங்களை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தாம்பரம்- வேளச்சேரி சாலையில், ராஜகீழ்ப்பாக்கம் சிக்னலில் இருந்து பிரிந்து செல்கிறது, மாடம்பாக்கம் சாலை. இது, வண்டலுார்- கேளம்பாக்கம் சாலையை இணைப்பதால், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டிப்பர், ஜல்லி லாரிகள், வேன், கார் என, நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.முக்கியமான சாலையில், ராஜகீழ்பாக்கம் சிக்னலில் இருந்து கோழிப்பண்ணை பஸ் நிறுத்தம் வரை, சாலை விரிவாக்கம் செய்யும் பணி, 2022ல் துவங்கியது. ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும், இப்பணி முடியவில்லை. சாலையில் பள்ளம் தோண்டி, ஜல்லி கொட்டி அப்படியே உள்ளது.இதனால், நாள்தோறும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி சிரமத்தை சந்திக்கின்றனர். இரவில், விபத்தும் ஏற்படுகிறது. இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், பணியை துரிதப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த நிலையில், மாடம்பாக்கத்தில் இருந்து வந்து ராஜகீழ்ப்பாக்கம் சிக்னலில் வேளச்சேரி சாலைக்கு திரும்பும் இடத்தில், சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக சிக்னல் மற்றும் கேமரா கம்பங்கள் உள்ளன. அவற்றை அகற்றினால் மட்டுமே, அங்கு சாலையை அகலப்படுத்த முடியும்.இதை அகற்றி தருவதில், போக்குவரத்து போலீசார் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல், நெடுஞ்சாலைத் துறையினரும் இவ்விஷயத்தில் தீவிரம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இரு துறையினரும் ஒருங்கிணைந்து, சிக்னல் மற்றும் கேமரா காம்பங்களை அகற்றி, சாலையை அகலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.