சென்னை,ஆன்லைன் வரத்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி, 300 பேரிடம் 15 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.சென்னை, மணலி பெரியதோப்பு தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகார்: , சென்னை ஈக்காட்டுதாங்கலில், 'அன்னை கேப்பிட்டல் சொல்யூசன்ஸ்' என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை தினேஷ்குமார் என்பவர் நடத்தி வந்தார். இவர், 2022ல் வெளியிட்ட விளம்பரத்தில், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகலாபம் தருவதாக குறிப்பிட்டு இருந்தார். இதை உண்மை என நினைத்து, நான் மட்டுமின்றி நுாற்றுக்கணக்கானோர் பணத்தை செலுத்தினோம். ஆனால், வாக்குறுதி அளித்ததுபோல் லாப தொகையை கொடுக்காமலும், முதலீடு செய்த பணத்தை திரும்ப தராமலும் ஏமாற்றி வருகிறார்.எனவே, தினேஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பாதிக்ககப்பட்டுள்ளோருக்கு பணத்தை மீட்டு தரவேண்டும்.இவ்வாறு புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், உதவி கமிஷனர் ஜான் விக்டர் தலைமையில் தனிப்படை அமைத்தனர்.விசாரணையில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அந்த பணத்தை ஆன்லைன் வர்த்தகத்தில் பயன்படுத்தி, மாதம், 17,100 ரூபாய் என, 12 மாதங்கள் லாபம் கொடுப்பதாக கூறி ஏமாற்றியது தெரியவந்தது. இதுவரை, 300 பேரிடம் 15 கோடி ரூபாய் வரை ஏமாற்றிஉள்ளனர்.இது தொடர்பாக, தினேஷ்குமார், 37, பிரேம் கிருபால், 38, திலீப் குமார், 41, அருண்குமார், 40 ஆகியோரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். 'கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம்' என, போலீசார் எச்சரித்து உள்ளனர்.